டுவிட்டரில் பெரும்பாலான ஊழியர்களை பணி நீக்கம்

04.11.2022 12:15:32

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் ஆகிய நடவடிக்கைகளை எடுத்தார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். முன்னதாக, டுவிட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியிருந்தார். இந்த நிலையில் டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணியாளர்களின் எண்ணிகையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், மூன்று ஆண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது தற்போது சுமார் 7500 ஊழியர்கள் டுவிட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கை 3000 ஆக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுவிட்டரில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோவின் படி, எந்தெந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை, டுவிட்டர் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை(இன்று) அமெரிக்க நேரப்படி காலை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும், எத்தனை ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்பதை மெமோவில் விவரிக்கவில்லை. இன்று காலை அமெரிக்க நேரப்படி 9 மணிக்கு பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். மேலும், டுவிட்டரின் அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் செயல்பட்டு வரும் டுவிட்டரின் அலுவலகம் குழப்பம் மற்றும் சோகம் நிறைந்த இடமாக உள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சோகத்தில் உள்ளனர். தங்கள் வேலை நீடிக்குமா அல்லது வேலை பறிபோகுமா என்பது தெரியாமல் அவர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஊழியர்களின் வேலை நீடிக்குமா இல்லையா என்பது குறித்த நிலையை தெரிவிக்கும் மின்னஞ்சல் இந்திய நேரப்படி இன்று இரவு 9:30 மணிக்கு அந்தந்த ஊழியர்களுக்கு அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஊழியர்கள் சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, சந்தைப்படுத்தல், விற்பனை, எடிட்டோரியல் மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு போன்ற பிரிவுகளில் முழு அளவில் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, திங்கள்கிழமை முதல் டுவிட்டரின் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.