ஆப்கன் நிலைப்பாட்டில் இணைந்து செயல்பட இந்தியா-பிரிட்டன் முடிவு
ஆப்கனில் அரசியல் மாற்றத்தால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் அகதிகள் பிரச்னை மக்களின் துயரம் ஆகியவற்றுக்கான தீர்வுகளை இணைந்து மேற்கொள்வது என இந்தியா - பிரிட்டன் நாடுகள் முடிவு செய்துள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியா தலைமையிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அடுத்து ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் ஆகியோரையும் சந்தித்து ஆப்கன் விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.பின் பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சர் டொமினிக் ராப் உடன் ஜெய்சங்கர் பேசினார்.
அப்போது ஆப்கன் நிலவரத்தால் எழுந்துள்ள சவால்கள் குறித்து பேசியதாக ஜெய்சங்கர் 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். ஆப்கன் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அங்குள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கன் அரசியல் மாற்றத்தால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் அகதிகள் பிரச்னை உள்நாட்டு மக்களின் துயரம் ஆகியவற்றுக்கான தீர்வுகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ள பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.