விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' படத்தின் முதல் பாடல்!
தமிழ் சினிமாவில் தரமான குடும்ப படங்களை வழங்கி ரசிகர்களின் மனதில் இன்றும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்குநர் விக்ரமனின் மகனான விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஹிட் லிஸ்ட்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டு படக் குழுவினருக்கும், நாயகனாக அறிமுகமாகும் விஜய் கனிஷ்காவுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர்கள் சூரியக்கதிர் -கே. கார்த்திகேயன் என இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் 'ஹிட் லிஸ்ட் ' எனும் திரைப்படத்தில் விஜய் கனிஷ்கா, ஆர். சரத்குமார், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபி நட்சத்திரா, அபிநயா, சித்தாரா, முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லீ, கருடா ராமச்சந்திரா, மைம் கோபி, அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற' நான் எவனோயில்லை நான் ஆண்டவனுமில்லை..' என தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் சாரதி மற்றும் எம் சி விக்கி ஆகியோர் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சி. சத்யா மற்றும் எம் சி விக்கி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். றாப்புடன் இணைந்து வரும் இந்த மேலத்தேய பாணியிலான பாடல் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.