இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு
இஸ்ரேல் முன்னெடுக்கவுள்ள இராணுவ நடவடிக்கை பாரிய விளைவுகளையும் உயிராபத்துக்களையும் ஏற்படுத்துமென ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேலின் அமைச்சரவை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, கசா நகரத்தின் மீது திட்டமிட்ட படையெடுப்பை முன்னெடுப்பதற்கு ஏகமனதாக வாக்களித்தமை பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸின் போர்நிறுத்த வாய்ப்பை நிராகரித்து, 100,000 மக்களை வெளியேற உத்தரவிட்டு தெற்கு காசா நகரத்திற்குள் தமது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், குறித்த நடவடிக்கையின் நோக்கம், “பணயக்கைதிகளை விடுவிப்பதில் முன்னேற்றம் மற்றும் பிற போர் நோக்கங்களுடன், ஹமாஸ் மீது இராணுவ அழுத்தத்தை பிரயோகிப்பதே ஆகும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஹமாஸின் சமீபத்திய போர்நிறுத்தம் “இஸ்ரேலின் எதிர்பார்ப்புக் கோரிக்கைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இஸ்ரேலுக்கும் ஹமாஷூக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களது துன்பங்களை நிறுத்துவதற்கு இருதரப்பினரும் உடனடியாகவே பொது உடன்படிக்கைக்குச் செல்ல வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே இந்தச் சந்தர்ப்பத்தினைத் இருதரப்பினரும் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன், ரஃபாவில் தரைவழிப் படையெடுப்பொன்றினை முன்னெடுப்பதானது தீர்வாகாது எனவும் வெர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் குறித்த தரைவழிப் படையெடுப்பு முன்னெடுக்கப்படுமானால் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், அது பிராந்தியத்தினைச் சீர்குலைக்கும் சகிக்க முடியாத விடயமாகவும் இருக்கும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.