
79-வது சுதந்திர தினவிழா.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா இன்று டெல்லி செங்கோட்டையில் காலை 07.30 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழாவுக்கு காலையில் பிரதமர் வருகை தந்த போது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.
தொடர்ந்து பிரதமருக்கு டெல்லி பகுதியின் இராணுவ தளபதி அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் பிரதமரை காவலர் மரியாதை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
இந்த மரியாதையை 3 படைகள் மற்றும் டெல்லி பொலிஸ் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து தலா 24 பேர் என மொத்தம் 96 பேர் பிரதமருக்கு அளித்தனர். ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்கியது.
அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்றார். அங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் முன்னிலையில் முப்படைகளின் தளபதிகள் பிரதமரை மீண்டும் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது.
கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.