கியூபாவின் கோவிட் தடுப்பூசிக்கு வியட்நாம் 'பச்சைக் கொடி'

18.09.2021 15:03:19

உலகின் 5 கம்யூனிச நாடுகளில் வியட்நாமும் ஒன்று. சீனா, வட கொரியா, லாவோஸ், கியூபா வரிசையில் வியட்நாமும் இருக்கிறது. வியட்நாமின் மக்கள் தொகை வெறும் 9.8 கோடி தான். ஆனால் அங்கு இதுவரை, மக்கள் தொகையில் 6.3 சதவீதம் பேருக்கு மட்டுமே இரு தவணைகள் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.


தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலேயே வியட்நாமில் தான் கோவிட் தடுப்பூசி மிகமிகக் குறைந்த அளவில் செலுத்தப்பட்டு உள்ளது. வியட்நாம் இதுவரை 8 விதமான இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு டெல்டா கோவிட் வைரசால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 6,67,650 பேருக்கு கோவிட் பாதித்துள்ளது. 16,637 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு தற்போது தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


இந்நிலையில் வியட்நாம் அதிபர் நிகுவென் சுவான் புச் கியூபாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்துக்கு முன், கியூபாவின் சொந்தத் தயாரிப்பான, கோவிட்டுக்கு எதிரான 'அப்டலா' தடுப்பூசியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்தார்.

கியூபாவில் 2 வயது முதல் 10 வயதிலான குழந்தைகளுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே 2 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி கியூபா சாதனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.