விமானப்படை ஈடுபடாததன் மர்மம் என்ன...?
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.
அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.
அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
ரஷிய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால் தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை இன்னும் கைப்பற்றவில்லை.
இந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை வீசப்பட்டது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 8 வது நாளை எட்டியுள்ளது. பலர் எதிர்பார்க்காத வகையில் உக்ரேனியப் படைகள் ரஷிய படைகளுக்கு எதராக சண்டையிட்டு வருவதால் மோதல் உடனடியாக முடிவுக்கு வரவில்லை.
மிக அதிக சக்தி பெற்ற ரஷிய ராணுவம் மற்றும் உக்ரைனுக்கு எதிரான முரண்பாடுகள் அடுக்கப்பட்ட நிலையில், ரஷியா ஆரம்பத்தில் அதிக எதிர்ப்பு இன்றி போரில் வெற்றிபெற முடியும் என்று நினைத்தது.
ஒருபுறம், பொதுமக்கள் உயிரிழப்பை விரும்பாததால், இன்னும் முழுத் தாக்குதலைத் தொடங்கவில்லை என்று ரஷியா வலியுறுத்துகிறது, ரஷியப் படைகள் தாங்கள் எதிர்பார்க்காத இழப்புகளைச் சந்தித்ததாக உக்ரைன் கூறி வருகிறது.
ரஷியா விமானப்படை நடவடிக்கைக்கு அதிகம் முக்கியத்தும் கொடுக்காதது ஏன் என்று சர்வதேச நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஷியாவின் ஹெலிகாப்டர் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைன் விமானப்படை தற்காப்புத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ரஷியா ராணுவம் திறமையற்றதா அல்லது உக்ரேனிய குடிமக்களுக்கு வெளியேற நேரம் கொடுத்ததா என்பது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
ரஷியாவின் மென்மையான தாக்குதலுக்கு ஒரு காரணம் இரண்டு முக்கிய துறைமுக நகரங்களான மேற்கில் உள்ள ஒடேசா மற்றும் உக்ரைனின் வசம் உள்ள மரியுபோல் ஆகும். ரஷியப் படைகள் தெற்கில் உள்ள கிரிமியாவிலிருந்து இரண்டு நகரங்களின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டன. வடக்கில் இருந்து, கீவ் நகருக்கான முன்னேற்றமும் மெதுவாகவே உள்ளது.
ரஷியா உக்ரைன் எல்லையில் குவித்துள்ள 1,588 அணு ஆயுதங்களை குவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கைவசம் உள்ள அணு ஆயுதங்கள் - 4369 அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் தரை வழி தாக்குதலுக்கு தயாராக உள்ள ஏவுகணைகள்- 812
இந்த ஏவுகணைகளை செலுத்தினால் அவை ரஷியாவில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் லண்டன் நகரை அடைந்துவிடும்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும், குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் தயார் நிலையில் உள்ளது. இதில் 500 கிலோ டன் முதல் 50 கிலோ டன் வரையிலான வெடிபொருள்கள் நிரப்பி தாக்குதல் நடத்தலாம்.
வான்வெளி தாக்குதல் நடத்த 34 சுகோய் போர்விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. இதுபோல மிக் 31 மற்றும் மிக் 31 ஏ ரக போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளது.
கடல் வழி தாக்குதல் நடத்த போர் கப்பல்களும், அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நீர் மூழ்கி கப்பல்களும் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு கப்பல்களிலும் யுத்த தளவாடங்களும், சூப்பர் சானிக் வேகத்தில் செல்லும் ஏவுகணைகளையும் இயக்க முடியும்.
போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்க ரஷிய அதிபரின் அனுமதி வேண்டும். இதற்கான அனுமதி பெட்டகம் ரஷிய அதிபரிடம் உள்ளது. இதன் பெயர் செகட். அதிபர் உத்தரவிட்டால் அணு ஆயுதங்கள் உக்ரைன் நோக்கி பறந்து செல்லும். அணு ஆயுதங்கள் வெடிக்கும் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு புல் பூண்டு கூட முளைக்காத அளவிற்கு சர்வ நாசம் நிகழும். இதன் தாக்கம் பல ஆண்டுகளுக்கு தொடரும்.
இதுகுறித்து மேஜர் ஜெனரல் அசோக் குமார் (ஓய்வு) கூறும் போது,
ரஷியா முழு அளவிலான தாக்குதலை மேற்கொள்ளவில்லை, ஏனெனில் அது பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து கவலை கொண்டுள்ளது. இந்த காரணத்தினால் தான், அவர்களின் ஆரம்ப போர் அவ்வளவு விரைவாக இல்லை.
ரஷியாவைப் பொறுத்த வரை, அவர்களின் கவனம் உள்ளூர் மக்களை அடிபணிய வைப்பது அல்ல, ஆனால் அவர்கள் ஆட்சியை ரஷியா சார்பு ஆட்சிக்கு மாற்ற விரும்பினர், ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது ரஷியாவிற்கு கடுமையான பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்துகிறது என கூறினார்.