"ஈமானின் பக்குவங்கள் நமது எதிர்காலத்தை உறுதிப்படுத்தட்டும்"
முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுறுவதற்கு புனித நோன்புப் பெருநாளில் பிரார்த்திக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"பெருநாள் தினமான இன்று, நம் அனைவரினதும் ஹலாலான தேவைகள் நிறைவேறட்டும். அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து நோன்பு நோற்று, நல்லமல்கள் செய்த நாம் இந்த ஈமானின் பக்குவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
நெருக்கடிகள், சோதனைகளின்போது பொறுமை மற்றும் தொழுகையைக்கொண்டு உதவி தேடுவதே சிறந்தது. ரமழானின் பக்குவங்கள் நமது முன்னேற்றப் பாதைகளுக்கு உறுதியாக அமையட்டும். சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை முறியடிக்க, ஈமானின் பலத்திலும் பக்குவத்திலும் நாம் அணிதிரள வேண்டும்.
பலஸ்தீன மக்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் ஒருபோதும் வெல்லப்போவதில்லை. இந்தப் போக்குகளின் அதே சாயலிலே, எமது நாட்டு அரசியலை முன்னெடுக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர். சலுகைகளுக்காக சந்தர்ப்பங்களை நழுவவிடும் அரசியலையும் செய்ய முடியாது.
இவ்வாறு திரைமறைவில் செயற்பட்டு, நமது சந்தர்ப்பங்களை கபளீகரம் செய்வோருடன் இணங்கிச் செல்லும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. சமூகங்களை நேசிக்கின்ற, சிறுபான்மையினரையும் சம அந்தஸ்த்தில் அரவணைக்கும் அரசியல் கோட்பாடுகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.