சிறிலங்காவின் தேசிய கொடியை ஏந்திய இந்திய கிரிக்கெட் பிரபலம்!

14.09.2022 10:27:11

15 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதி கொண்டன.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

 

6-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய இலங்கை

இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதனால் 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது இருக்கிறது இலங்கை கிரிக்கெட் அணி.

 

ரசிகர்களை கவர்ந்த கம்பீர்  

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்ற பின்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

போட்டி நிறைவுற்றதும் மைதானத்தில் இலங்கை ரசிகர்கள் முன்னிலையில் கம்பீர் இலங்கை நாட்டின் கொடியை கையில் எடுத்து அசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

கம்பீர் இலங்கைக் கொடியை கையில் எடுத்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அவருக்காக பலத்த கரகோஷம் எழுப்பத் தொடங்கியது. குறித்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி கம்பீருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த காணொளியை கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து " சூப்பர் ஸ்டார் அணி... உண்மையிலேயே தகுதியானது! வாழ்த்துக்கள் சிறிலங்கா " என குறிப்பிட்டிருந்தார்.