கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம்

22.09.2021 15:49:59

இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்பும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் தற்போது கோவிஷீல்டு  தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அரசு அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகளை அண்மையில் அறிவித்தது.

இதன்படி, இந்தியாவில் இருந்து வருபவர்கள் 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்கள்  தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள். அவர்கள் 10 நாட்கள் சுயதனிமைப்படுத்துதலில் இருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் தனிமைப்படுத்துதல் இன்றி இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு உள்ளது.ஆனால், இந்தியர்கள் அந்த பட்டியலில் இல்லை. இந்த புதிய கட்டுப்பாடுகள் அக்டோபர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இந்த நடவடிக்கையால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.

இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் எலிசபெத் டிரசை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியர்களை தனிமைப்படுத்தும் பாரபட்சமான விதிமுறை குறித்து கவலை தெரிவித்தார். மேலும், இரு நாட்டின் பரஸ்பர நலனில் அக்கறை கொண்டு, புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளில் மாற்றம் செய்து பிரச்னைக்கு தீர்வு காணும்படியும் கேட்டுக் கொண்டார்.இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதாவது, கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்கள் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இங்கிலாந்து அரசு அறிவித்திருக்கிறது.

அதே சமயம் இங்கிலாந்திற்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே கோவிஷீல்டு தடுப்பூசியின் முழுமையான அளவை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.