ஐ.நா அமைதி படை மீது இஸ்ரேல் தாக்குதல்!
லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படையின் கோபுரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனானின் காஃபர் கெலா கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட ஐ.நா அமைதி காக்கும் படையின் கண்காணிப்பு கோபுரங்கள் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. |
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஐ.நா அமைதி காக்கும் படையின் கண்காணிப்பு கோபுரங்கள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 கேமராக்கள் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எச்சரிக்கை இருந்த போதிலும், ஐ.நா அமைதி காக்கும் படைகள் மீது நேரடியாகவும், வெளிப்படையாகவும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்படுவதை பார்க்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா பணியாளர்கள் மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாப்பது மற்றும் ஐ.நா வளாகத்தின் தடையற்ற தன்மையை உறுதி செய்வது ஆகியவற்றை இஸ்ரேலிய ராணுவம் மற்றும் பிற அமைப்புகள் எல்லா நேரங்களிலும் மதிப்பது அவர்களின் கடமை என்பதை நினைவூட்டுகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐ.நா அமைதி காக்கும் படை மீது நடந்த தாக்குதல் ஒரு வீரர் கொல்லப்பட்டார். இதுவரை ஒட்டுமொத்தமாக லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 5 ஐ.நா அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து ஐ.நா அமைதி காக்கும் படை மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. |