தலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்காக அழைக்கிறார் ஆப்கான் ஜனாதிபதி

07.03.2021 08:39:52

தலிபான்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முயற்சியில் புதிய தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

காபூலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அத்துடன், தேர்தல்கள் ஊடாக அதிகாரப் பரிமாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரலாம் என கானி கூறியுள்ளார்.

எனவே, சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல்களை நடத்துவது குறித்து விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் தேர்தல் திகதி பற்றிப் பேசலாம் என்பதுடன் ஒரு முடிவுக்கு வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா – ஆப்கானிஸ்தானுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.