பிரித்தானியாவின் தடையை வரவேற்கின்றோம்.

26.03.2025 07:00:00

போர்க் குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை நபர்கள் மீது பிரித்தானியா மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை அறிவித்துள்ளமையை வரவேற்கின்றோம் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் போர்க்கால இராணுவத் தளபதிகள் மூவர் மீதும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் துணை இராணுவ குழுத் தலைவர் ஒருவர் மீதும் மக்னஸ்கி சட்டத்தின் கீழ் பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த ஆச்சரியமான முடிவினை பாதிக்கப்பட்டவர்களும் உலகளாவிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர். இந்த அறிவிப்பு குறித்து இப்போது எனது உணர்வுகள் எப்படி உள்ளன என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாதுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், உள்நாட்டுக்குள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையினை நான் இழந்துகொண்டிருந்தேன். ஆனால், இவ்விடயங்களுக்காக போராடிவரும் ஒரு சட்டவாளராகிய எனக்கு இது ஒரு நம்பிக்கைக் கீற்றினைத் தந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் சிறிய சந்தோஷத்தினை இது கொடுக்கும். எமது போராட்டத்தினை நாங்கள் கைவிடப்போவதில்லை என்று வட இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் தொடர்பான சட்டவாளர் தெரிவித்தார்.

ஒவ்வொரு போர்க்குற்றவாளிகளும் கொலை, காணாமல்போகச்செய்தல் போன்ற பாரதூரமான வன்முறைகளில் ஈடுபட்டவர்களும் பொறுப்புக்கூறலுக்கு ஆளாக்கப்படுதல் வேண்டும்.

இந்தச் செய்தியானது என்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கும் எமது குடும்பங்களுக்கும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுவதற்கான சிறு நம்பிக்கையைக் கொடுக்கிறது என்று இலங்கையிலிருந்து தப்பிப் பிழைத்து வெளிநாட்டில் வசிக்கும் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.

சசீந்திர சில்வா அத்துடன், இந்த ஆண்டு ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, சட்டவிரோதக் கொலைகள், சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவப் படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமைதாங்கி வழிநடத்தியதாக பிரித்தானிய அரசாங்கம் இணையத்தில் வெளியிட்ட தடைப்பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

படுகொலைகளைச் செய்வதற்கு சவேந்திர சில்வா கட்டளை பிறப்பித்ததாக நேரடியாக குற்றச்சாட்டியுள்ளது. குறிப்பாக சரணடைய முயன்ற விடுதலைப்புலித் தலைவர்கள் கொல்லப்படவேண்டுமென ஆணை பிறப்பித்ததுடன், போரின் இறுதி நாட்களில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை இவரது தலைமையிலான படையினர் கொலை செய்த காலப்பகுதியில் இவர் களமுனையிலும் இருந்துள்ளார்.

அது 'வெள்ளைக்கொடிச் சம்பவம்' என்று அறியப்படும் சம்பவத்தினை குறிக்கிறது. இச்சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை உறுப்பினர்கள் சரணடையுமாறு தூண்டப்பட்டு, நீதிக்குப் புறம்பான முறையில் கொல்லப்பட்டார்கள்.

ஐ.நா. மேற்கொண்ட விசாரணையும், இத்தலைவர்கள் (ஒருவருடைய மனைவி உட்பட) அங்கிருந்த மூத்த இராணுவத் தலைமைப்பீடத்தின் கட்டளையின் கீழ் படைவீரர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதென முடிவுசெய்துள்ளது.

இச்சரணடைவு தொடர்பில் 2015ஆம் ஆண்டில் முதன்முதலாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் வெளிக்கொண்டுவந்ததுடன், 2019இல் சவேந்திர சில்வா தொடர்பாக ஆவணம் ஒன்றினையும் வெளியிட்டது.

2021ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்கும் கனடாவுக்கும் விபரமான தடைக்கோவைகளையும் இது அனுப்பி வைத்திருந்தது.

'பாதிக்கப்பட்டவர்களதும் அவர்களது குடும்பங்களதும் இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் வீணாகிப்போகவில்லை. போர்க்குற்றவாளிகளை அவர்களது கொடூர அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறவைப்பதனை நோக்கிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பிரித்தானிய அரசாங்கத்துக்கு நன்றிகள்' இவ்வாறு போரிலிருந்து உயிர் தப்பி தற்போது பிரித்தானியாவில் வாழும் தமிழர் ஒருவர் கூறினார்.

ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக 2017ஆம் ஆண்டில், உலகளாவிய அதிகார வரம்பு வழக்குகளை இலத்தீன் அமெரிக்காவில் தாக்கல் செய்தது.

சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் பெயர்போன ஜோசப் முகாம் எனப்படும் இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தமை தொடர்பிலேயே இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

அந்நேரத்தில் இலங்கையின் இராஜதந்திரியாக இருந்த அவர், இதன் விளைவாக பிரேஸிலிலிருந்து தப்பி, இலங்கைக்கே திரும்பியிருந்தார். 2019ஆம் ஆண்டு, இரண்டு முறை இவர் அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய மையத்துடன் இணைந்து, 2020ஆம் ஆண்டு, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் இவர் தொடர்பில் அவுஸ்திரேலிய மத்திய பொலிஸாருக்கு 5 முறைப்பாடுகளைச் செய்தது.

எனினும், இலங்கைக்கு உள்ளேயே விசாரணை நடைபெறுவதையே தாம் விரும்புவதால் இம்முறைப்பாடு தொடர்பில் தாம் விசாரணை நடத்தமாட்டோமென 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பொலிஸ் துறை தெரிவித்தது.

அதே ஆண்டில், ஜெயசூரிய தொடர்பான 100 பக்கங்களைக் கொண்ட தடை ஆவணம் ஒன்றினை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பிரித்தானிய அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தது. பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஒரு ஆவணத்தினை அனுப்பி வைத்தது.

வசந்த கரன்னகொட போர்க்காலத்தில் கடற்படைத் தளபதியாகவும் -இராஜதந்திரியாகவும் இருந்த வசந்த கரன்னகொடவும் தடைசெய்யப்பட்டுள்ளார். இதர விடயங்களுடன், கிழக்குக் கரையோரத்தில் உள்ள பிரதான கடற்படை முகாமில் நிலக்கீழ் சித்திரவதைக் கூடங்களை வைத்திருந்ததுடன், போர் நடந்த நேரத்திலும், அதற்குப் பின்னரும், பல எண்ணிக்கையிலான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டதுடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதும் இங்கே நிகழ்ந்தன. தற்போது ஐரோப்பாவில் வாழும், காணாமலாக்கப்பட்டவருடைய ஓர் உறவினர் தெரிவித்தார்.

கடற்படை புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்ட பிள்ளையின் தாயார் ஒருவர் கூறும்போது, 'இது மிகவும் நல்ல செய்தி, இது எமக்கு நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், எங்கள் அரசாங்கத்தை பற்றிய சந்தேகங்கள் எமக்கு இப்போதும் இருப்பதால், நான் நினைப்பதை என்னால் வெளிப்படையாகக் கூறமுடியாது' என்று தெரிவித்தார்.

ஒரு தமிழ் துணை ஆயுதக் குழுத் தலைவரான, “கருணா” என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் தடைசெய்யப்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு கடவுச்சீட்டு மோசடிக்காக பிரித்தானியாவில் இவர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் மீது போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள் நடந்துகொண்டிருந்தபோதிலும், அந்நேரத்தில் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, இராணுவத்துடன் இணைந்துகொண்ட கருணாவின் படைகள், கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர் ஆட்சேர்ப்பு, கடத்தல், கொலைகள், சித்திரவதை மற்றும் மிரட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

'காலதாமதமானாலும் இறுதியில் நீதி கிடைக்கும் என்பதுடன் இப்போர்க்குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு ஆளாக்கப்படுவார்கள். இவர்கள் இழைத்த கொடிய பாவங்களுக்கான தண்டனையிலிருந்து அவர்களால் தப்பமுடியாது என்ற வலுவான செய்தியினை போர்க்குற்றவாளிகளுக்கு இத்தடைகள் வழங்கும்' என சித்திரவதையிலிருந்து உயிர் தப்பிய தமிழர் ஒருவர் கூறினார்.

இத்தடைகள் 2020ஆம் ஆண்டுக்கான பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தடைகளுக்கான ஒழுங்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. பட்டியலிடப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக நிதி, இயக்குனர் தகுதிநீக்கம் மற்றும் குடிவரவுத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

பிரித்தானியாவின் தடைப்பட்டியலில் கூறப்பட்டுள்ளதன்படி, நான்கு இலங்கை பிரஜைகள் மீது நிதி மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்படுகின்றன. இலக்கு வைக்கப்பட்ட சொத்து முடக்கங்கள் என்பதில் பண மற்றும் இதர சொத்துக்களை (சொத்து அல்லது வாகனங்கள்) முடக்குவது மற்றும் அவர்களுக்கு எந்த சொத்துக்களும் கிடைக்கமாட்டாது என்பதை உறுதிப்படுத்துவது என்பன உள்ளடங்கும்.

மேலும், தடை செய்யப்பட்ட நபர்கள் இங்கிலாந்தில் நுழையவோ அல்லது வசிக்கவோ முடியாது என்பதுடன் இடைத்தங்கல் உட்பட இங்கிலாந்துக்கு பயண விசா விண்ணப்பமும் மறுக்கப்படும்.

மேலும், நிதித் தடைகளை மீறுவது ஒரு குற்றவியல் குற்றமாகும்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போர்க்குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள். தஞ்சம் புகுந்துள்ள நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவினால் இவர்கள் பற்றிய உண்மை இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையிட்டு நாம் மகிழ்வடைந்துள்ளோம். கடந்த ஒரு தசாப்தமாக இவர்களைப் பற்றிய ஆதாரங்களை நாம் தொகுத்து வந்துள்ளோம்.

ஆனால், இவர்களுக்கு எதிரான வாக்குமூலங்களை வழங்கிய பாதிக்கப்பட்டவர்களையும், பல வருடங்களாக அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் நீதிக்காக போராடிவந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களையுமே இதற்குரிய பெருமை சென்றடைய வேண்டும் என்றார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போர்க்குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தஞ்சம் புகுந்துள்ள நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவினால் இவர்கள் பற்றிய உண்மை இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையிட்டு நாம் மகிழ்வடைந்துள்ளோம்.

கடந்த ஒரு தசாப்தமாக இவர்களைப் பற்றிய ஆதாரங்களை நாம் தொகுத்து வந்துள்ளோம். ஆனால், இவர்களுக்கு எதிரான வாக்குமூலங்களை வழங்கிய பாதிக்கப்பட்டவர்களையும், பல வருடங்களாக அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் நீதிக்காக போராடிவந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களையுமே இதற்குரிய பெருமை சென்றடைய வேண்டும் என்றுள்ளது.