’சட்ட கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட வேண்டும்’
நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட கட்டமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் நடைபெற்ற கண்டி சட்டத்தரணிகளுடனான சிநேகபூர்வ சந்திப்பில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை தொடர வேண்டுமா அல்லது அதை மாற்றியமைப்பதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். சம்மதித்து விட்டு ஒவ்வொரு முறையும் முடிவை மாற்றிக் கொள்ளும் அவப்பெயர் இலங்கைக்கு உண்டு.
இதுவே நாட்டுக்காக எமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். எனவே, இந்த நன்மையை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்க எதிர்பார்க்கிறோம். நாட்டின் மீதான பொறுப்பில் இருந்து நாம் யாரும் தப்ப முடியாது. எனவே, அதனால் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதார மாற்றத்தில் சட்டக் கட்டமைப்புகளும் நவீனமயமாக்கப்பட வேண்டும். 20 வருடங்கள் முன்னோக்கிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். இன்னும் 20 வருடங்களில் நானும் இங்குள்ள பெரும்பாலானவர்களும் உயிருடன் இருக்க மாட்டோம். ஆனால் இங்குள்ள இளம் வழக்கறிஞர்கள் இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்