ஓரங்கட்டப்பட்டாரா அண்ணாமலை?

15.01.2026 13:55:22

பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு துக்ளக் குருமூர்த்தி பதில் அளித்துள்ளார். "கட்சி பொறுப்​பில் இருந்து அண்​ணா​மலை நீக்​கப்​பட்​டது பாஜக​வும், அண்ணாமலை​யும் சேர்ந்து எடுத்த முடிவு. அமித்ஷாவின் வியூகம்​தான் இது." என குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 'துக்​ளக்' வார இதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா, சென்​னையில் நேற்று நடை​பெற்​றது. இந்த​விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கலந்​து கொண்டார்.

பாஜக மாநில பொதுச்​செய​லா​ளர் ராம.ஸ்ரீனி​வாசன், காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுச்​சாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் வாசகர்​கள் எழுப்​பிய பல்​வேறு கேள்வி​களுக்கு 'துக்​ளக்​'ஆசிரியர் ஆடிட்டர் எஸ்​.குரு​மூர்த்தி பதிலளித்​தார். அப்​போது, "கட்சி பொறுப்​பில் இருந்து அண்​ணா​மலை நீக்​கப்​பட்டது பாஜக​வும், அண்​ணா​மலை​யும் சேர்ந்து எடுத்த முடிவு. அரசியலில் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற உத்தியை வகுத்தாக வேண்டும். அந்த வகை​யில் அமித்ஷா எடுத்த உத்​தி​தான் இது. அவர் திறமை​சாலி.

மகாராஷ்டிராவை பாஜக கைப்பற்றியது என்றால் அதற்கு அன்றைக்கு அமித்ஷா வகுத்த யுக்தி தான் காரணம். எல்லா திறமையும் கொண்டவர் அமித் ஷா. தற்போது தமிழ்நாட்டை அமித்ஷா கையில் எடுத்துள்ளார். அண்​ணா​மலை​யும் அதற்கு ஒத்​துழைப்​பார். எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் நெருங்கக்கூடாது என 2024ல் எடுத்த முடிவை மாற்றிக்கொண்டு, பாஜக உடன் வந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்ற எண்ணம் வந்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு முன்பாக உத்திகளை தயார் செய்ய வேண்டும். அதனைத்தன் அமித் ஷா செய்து கொண்டிருக்கிறார்." என்றார். தவெக தலைவர் விஜய் மீதான சிபிஐ விசாரணை தொடர்பாகவும், அவருக்கு இருக்கும் வாக்கு சதவீதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த குருமூர்த்தி, "விஜய்க்கு எத்தனை சதவீத வாக்கு இருக்கிறது என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு எத்தனை வாக்கு சதவீதம் கிடைத்தது என்பதை பார்த்தோம். விஜய் தேர்தலில் நின்றால் தான் வாக்கு சதவீதம் தெரியும். விஜய்க்கு பின்னால் இருப்பது ஒரு கூட்டம் அவ்வளவு தான். அந்தக் கட்சியில் தொண்டர்கள் கிடையாது, தலைமை கிடையாது. அவரின் கட்சியை ஒரு சீரியஸ் கட்சியாகவே நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் முதலமைச்சர் ஆவார் என பேசுவது எல்லாம் அபத்தம்" எனத் தெரிவித்தார்.

டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் இல்லாமல் தென் மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுமா? என வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த குருமூர்த்தி, "இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லையே. நாங்கள் ஒன்றும் பாஜகவில் சேர்க்க சொல்லவில்லை. இதை நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். அது அவருக்கு தான் தெரிந்து இருக்க வேண்டும்." எனக் கூறினார்.