விண்வெளியில் ஆயுத சோதனை
விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையை ரஷ்யா நடத்தியதை அடுத்து, அங்கு 1,500 துண்டுகளுக்கும் மேற்பட்ட குப்பை கழிவுகள் உருவாகி, விண்வெளி வீரர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விண்வெளியில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையை ரஷ்யா நேற்று முன்தினம் நடத்தியது. இதில், அந்நாட்டுக்கு சொந்தமான பழைய செயற்கைக்கோள் ஒன்று சுக்குநுாறாக நொறுக்கப்பட்டது. இதையடுத்து அந்த செயற்கைக்கோளின் பாகங்கள் 1,500க்கும் மேற்பட்ட துண்டுகளாக பிரிந்து விண்வெளியில் சுற்றி வருகின்றன.
இது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மிகவும் ஆபத்தான, பொறுப்பற்ற செயலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் குப்பையின் அச்சுறுத்தலால் நான்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள், இரண்டு ரஷ்ய மற்றும் ஒரு ஜெர்மனி வீரர் பணி செய்ய முடியாமல், தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ரஷ்யாவின் இது போன்ற நடவடிக்கைகளை இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. 'விண்வெளியில் ரஷ்ய வீரர்கள் தங்கள் பணிகளை எப்போதும் போல செய்து வருகின்றனர். பிரச்னை எதுவும் இல்லை' என, தெரிவித்துள்ளது.