கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது- சம்பந்தன்

07.09.2021 09:31:51

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பும் விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் பிளவுபடுத்தவே முடியாது.

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பத் தயாரித்த அறிக்கையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழீழ விடுதலை இயக்கமும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் கையெழுத்திட்டுள்ள விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டுகின்றது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகத் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பத் தயாரித்த அறிக்கையில் கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய இரு பங்காளிக் கட்சிகள் (தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) கையெழுத்திட்டமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவும் இல்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் என்னால் கருத்துத் தெரிவிக்கவும் முடியாது.

ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பும் விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன் – என்றார்.