அமேசான் காட்டைவிட்டு கூட்டமாக வெளியே வந்த ஆதிவாசிகள்

02.08.2024 15:40:52

சமீபத்தில், அமேசான் காட்டின் உள்பகுதியில் வாழும், அதிகம் வெளியில் தலைகாட்டாத ஆதிவாசிகள் கூட்டத்தைச் சேர்ந்த சிலர், திடீரென காட்டைவிட்டு வெளியில் வந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. உண்மையில், அந்தக் காட்சிகள் அதிரவைக்கும் ஒரு உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளன. அமேசான் காடுகளில், உள் பகுதியில் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள் இனம் ஒன்று Mashco Piro என அழைக்கப்படுகிறது. உண்மையில், அவர்களுடைய இனத்தின் பெயர் Nomole அல்லது Cujareño என்பதாகும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

  

அவர்கள் பெரு நாட்டையொட்டிய அமேசான் காடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் வெளியாட்களை முற்றிலுமாக தவிர்க்கும் குணம் கொண்டவர்கள்.

ஆனால், சமீபத்தில் அந்த ஆதிவாசிகளில் சுமார் 50 பேர் Las Piedras என்னும் நதியோரமாக கூட்டமாக வந்து நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இப்படி வெளியே தலையே காட்டாத ஒரு ஆதிவாசி கூட்டம் ஏன் இப்படி திடீரென வெளியே வந்தது என்று கேட்டால், அது பயங்கரமான ஒரு விடயம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதாவது, அவர்கள் வெளியே வரவில்லை. மரம் வெட்டுவதற்காக காடுகளை அழிப்போர், மரங்களை வெட்டி வெட்டி, அந்த ஆதிவாசிகளின் வீடுவரை சென்றுவிட்டார்கள் என்பது அதன் பொருள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஆகவேதான், தாங்கள் வாழும் இடத்துக்கே வெளியாட்கள் வந்துவிட்டதால் கோபமடைந்துள்ள அந்த ஆதிவாசிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவே, தங்கள் வழக்கத்துக்கு மாறாக தாங்கள் வாழும் அடர்ந்த காட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்கள் என்கிறார்கள் அவர்கள்.

ஆகவே, பாதுகாக்கப்படவேண்டிய அந்த பூர்வக்குடியினரை பாதுகாப்பதற்காக, அந்த பகுதிகளில் மரம் வெட்டுவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.