“எழுதாத மரபு விடுபட்டுள்ளது”

25.07.2024 08:02:26

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.அதில் பல்வேறு அறிவிப்புகள்  வெளியாகி இருந்தன.

 

இதையடுத்து மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நிதிநிலை அறிக்கையில் திருக்குறள் இல்லை எனச் சுட்டிக்கட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது அறிந்தே செய்யும் அநீதி.

தனக்கு எதிராகக் குடைபிடித்தவனுக்கும் சேர்த்தே பொழிவதுதான் மழையின் மாண்பு. மழை மாண்பு தவறிவிட்டது. நிதிநிலை அறிக்கையில் குறள் ஒன்று கூறுவது எழுதாத மரபு. இவ்வாண்டு விடுபட்டுள்ளது. எழுத வேண்டிய குறள் என்ன தெரியுமா? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.