நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் ஜெனிவாவுக்கு பயணம்!

15.09.2025 08:10:02

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் இறுதியில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.

இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண ராஜகருணா மற்றும் பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சின் முக்கிஸ்தர் ஒருவர் குறிப்பிட்டதுடன், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இந்த விஜயம் திட்டமிட்டுள்ள போதிலும், அதற்கு முன்னர் பெரும்பாலும் நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று, இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், நீதி அமைச்சின் சிறப்பு குழு மீண்டும் ஜெனிவா செல்கிறது.

இவ்வாறானதொரு நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை ஒரு கலவையான உணர்வைப் பிரதிபலித்திருந்தது. இலங்கை அரசு அண்மையில் அளித்த வாக்குறுதிகளை அவர் அங்கீகரித்தாலும், அவை வெறும் வார்த்தைகளாக நின்றுவிடாமல், உறுதியான நடவடிக்கைகளாக மாற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.

கடந்தகால மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு (Impunity) உருவாக்கிய காயங்களை ஆற்றுவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும் என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்தபோது செம்மணி மனிதப்புதைகுழி, மற்றும் கணவனுக்காகக் காத்திருக்கும் தெற்கைச் சேர்ந்த ஒரு பெண் என பாதிக்கப்பட்ட பலரிடமிருந்து நேரடியாகக் கேட்ட துயரங்களை வெளிப்படுத்தினார். சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுவது ஒரு நல்ல முயற்சி எனப் பாராட்டிய ஆணையாளர் வோல்கர் டேர்க், இதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான, பிரத்யேக நீதிப் பொறிமுறையின் அவசியம், பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும். அத்துடன், நிகழ்நிலைக்காப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம் உள்ளிட்ட மீறல்களுக்கு வழிவகுக்கும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்கொண்டு வரும் உள்நாட்டு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்நாட்டுப் பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனோர் விவகாரங்களை விரைவுபடுத்த மேலதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு உறுதியான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கை அரசு உள்நாட்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைத் தவிர்க்க முயல்கிறது. இந்த முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது.