
தவெகவின் 2ஆவது மாநில மாநாடு.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.
இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன.
மாநாட்டு மேடையின் உச்சியில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது‘ என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்.இ விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அத்துடன் மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில்,சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள்,2-வது அடுக்கில் பொலிஸார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
…….
இந்நிலையில் இன்று காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வருகை தந்த தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர்.
மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.