
மன்னார் நகர சபை அமர்வில் குழப்பம்!
மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு, மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் புதன்கிழமை (9) இடம்பெற்ற போதும்,சபையில் தொடர்ச்சியாக குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில் சபை யை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் சபை பிறிதொரு தினத்திற்கு நகர முதல்வர் ஒத்தி வைத்தார். |
மன்னார் நகர நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் புதன்கிழமை (9) காலை 10 மணியளவில் முதல் அமர்வு ஆரம்பமானது. இதன் போது ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் சபை அமர்வு ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கன்னி உரை இடம் பெற்றது. அதன் போது சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நகர சபை அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டை (பட்ஜெட்) ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பை வழங்க சபையில் தவிசாளரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும், மன்னார் நகர சபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் பல உறுப்பினர்கள் குறித்த விடயத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இன்னும் ஒரு தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதீட்டை தங்களினால் ஏற்றுக் கொள்ள முடியாது என பல உறுப்பினர்கள் சபையில் தெரிவித்த நிலையில் சபையில் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் சபையின் செயல்பாடுகள் தவிசாளரினால் அரை மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டது.பின்னர் மீண்டும் சபையின் செயல்பாடுகள் இடம் பெற்ற போதும் நகர சபை அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டை ஏற்றுக் கொள்ள உறுப்பினர்கள் மறுத்தனர். இதனால் நீண்ட நேரம் சபையில் அமைதியின்மை இடம் பெற்றபோது சபை உறுப்பினர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. மேலும் குறித்த பாதீடு குறித்து சபையின் செயலாளரின் கருத்துக்களை உறுப்பினர்கள் எதிர் பார்த்த போதும் செயலாளர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.இந்த நிலையில் நகர சபை உறுப்பினர்கள் சிலர் செயலாளருக்கு எதிராக கருத்தை தெரிவித்தனர்.இதனால் நீண்ட நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் குறித்த பாதீட்டை ஏற்றுக் கொள்ளவோ அல்லது அங்கீகரிக்க முடியாது என பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால் உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக கருத்து முறண்பாடு ஏற்பட்ட நிலையில் சபையினை முதல்வர் பிரிதொரு தினத்திற்கு ஒத்தி வைத்தார். |