
முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது.
2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக அவர் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.
நான்கு நீதிபதிகள் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிக்க வாக்களித்தார்.
போல்சனாரோவின் சட்டத்தரணிகள் இந்த தண்டனை அபத்தமானது எனக் கூறியுள்ளதுடன், மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, 2033 வரை அவர் பொதுப் பதவிக்குப் போட்டியிடுவதையும் தடை செய்தது.
வெளிநாடு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போல்சனாரோ, இந்த இறுதி கட்ட விசாரணையில் நேரில் கலந்து கொள்ளவில்லை.
இந்த தீர்ப்பின் மூலமாக 70 வயதான போல்சனாரோ, இப்போது தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்கும் துரதிர்ஷ்டவசமான வாய்ப்பை எதிர்கொள்கிறார்.
அவரது சட்டத்தரணிகள் அவரை சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று வாதிடுவார்கள் – அதே போல் குறைந்த தண்டனைக்கு வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இது கடினமாக இருக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஏனெனில் இது பொதுவாக ஐந்து நீதிபதிகளில் இருவர் விடுவிக்க வாக்களித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
போல்சனாரோ ஐந்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
இவை அனைத்தும் 2022 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றது தொடர்பானது.
ஆனால், 2026 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க இது வடிவமைக்கப்பட்டதாக அவர் கடந்த காலத்தில் கூறியிருந்தார்.
ஏற்கனவே தனித்தனி குற்றச்சாட்டுகளின் பேரில் பொதுப் பதவியில் இருந்து அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.
சதித் திட்டம் தொடர இராணுவத்திடம் போதுமான ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், ஜனவரி 8, 2023 அன்று போல்சனாரோவின் ஆதரவாளர்களால் அரசாங்க கட்டிடங்களைத் தாக்குவதில் மும்முரமாக இருந்தனர்.
இதன்போது சுமார் 1,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.