இஸ்ரேலிய கேணல், மேஜர் பணி நீக்கம்
காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்ட தனது படை அதிகாரிகள் இருவரை பணிநீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸாவில் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த, 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' எனும் அமெரிக்க தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது கடந்த திங்கட்கிழமை (01) இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 7 பேர் உயிரிழந்தமை கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இத்தாக்குதல் தவறுதலாக இடம்பெற்றது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறினார். அதேவேளை இத்தாக்குதலுக்கு தான் மன்னிப்பு கோருவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹேர்ஸாக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் பல்வேறு தவறுகளும் விதிமுறை மீறல்களும் இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் உறுப்பினர்களையே இலக்குவைப்பதாக தாம் நம்பியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
மேற்படி ட்ரோன் தாக்குதலுக்கு உத்தரவிட்ட கேணல் ஒருவரும் மேஜர் ஒருவரும் பணியிலிருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர் எனவும் தென் பிராந்திய தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் முறையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்துவது குறித்து ஆராயும் பொறுப்பு இராணுவ அட்வகேட் ஜெனரலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
3 பிரித்தானியர்கள், ஒரு அவுஸ்திரேலியர், போலந்து பிரஜையொருவர், பலஸ்தீனர் ஒருவர், அமெரிக்க–- கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
இன்றுடன் 6 மாதங்கள் பூர்த்தியாகும் காஸா யுத்தத்தில் தனது தவறுகள் தொடர்பாக இஸ்ரேல் மன்னிப்பு கோரியமை அரிதாகும். இந்த யுத்தத்தினால் காஸாவில் 33,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.
அமெரிக்கா வரவேற்பு
இதேவேளை, தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டமைக்கு இஸ்ரேல் முழுமையாக பொறுப்பேற்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பெல்ஜியத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இஸ்ரேல் இச்சம்பவத்துக்கு முழுமையாக பொறுப்பேற்கின்றமை முக்கியமானது. இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை பொறுப்பாளிகளாக்குவதற்கு இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்வதாக தென்படுவதும் முக்கியமானது' என்றார்.
விசாரணைக்கு வலியுறுத்தல்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சுயாதீன விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் வலியுறுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிரிமினல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலந்து வலியுறுத்தியுள்ளது.
இக்கொலைகள் தொடர்பில் இஸ்ரேல் வழங்கிய தகவல்கள் போதுமானவையாக இல்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிப்படையான, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
காஸாவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும் தொண்டர்களின் பாதுகாப்புக்கும் இஸ்ரேல் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கடந்த வியாழக்கிழமை பிரதமர் நெதன்யாஹுவுடன் தொலைபேசி மூலம் உரையாடியபோது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார். காஸாவுக்கு மேலும் அதிக நிவாரணங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதன்பின், காஸாவுக்கு தனது எல்லைகள் ஊடான விநியோக நடவடிக்கைகளை தற்காலிகமாக அனுமதிப்பதாக இஸ்ரேல் நேற்றுமுன்தினம் அறிவித்தது.
இதேவேளை, காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் நடைபெறவுள்ளன. அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளும் இதற்காக கெய்ரோ செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.