காசாவில் எங்கும் பாதுகாப்பு இல்லை

21.10.2024 07:47:18

பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காசாவின் பீட் லாஹியா (Beit Lahia) பகுதியில் சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழி ராக்கெட் தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  

மேலும் குடியிருப்பு பகுதி மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் மக்கள் சிலர் இன்னும் சிக்கி இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை சரிபார்த்து வருவதாகவும், ஹமாஸ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் மறு ஒருங்கிணைப்பு ஆவதை தடுப்பதாக கூறி, இஸ்ரேலிய படைகள் சரமாரியான குண்டுவீச்சு தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஐ.நாவின் மூத்த அதிகாரி, மோசமான கனவு காசாவில் தீவிரமடைந்து வருகிறது, போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில் ஐ.நாவின் அமைதி செயல்முறை ஒருங்கிணைப்பாளர் Tor Wennesland, காசாவில் எங்கும் பாதுகாப்பு இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.