மாநாடு வெற்றி - சிம்புவை முன்னிலைப்படுத்தும் மஹா படக்குழு

25.12.2021 11:28:25

சினிமாவில் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் போதும் அந்த பட நடிகரின் அடுத்தடுத்த படங்களை தூசி தட்டி எடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெறும். உதாரணத்துக்கு ஜெய் பீம் படத்தில் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படத்துக்கும் அவரது நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் அடுத்து நடித்துள்ள படங்களில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

சிம்பு நடிப்பில் நீண்ட காலம் கழித்து வெளியாகி நீண்ட காலம் கழித்து அவருக்கு வெற்றியை கொடுத்த படம் மாநாடு. எனவே சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் வேகம் எடுத்துள்ளன. சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் மஹா. இதில் ஹன்சிகா, ஸ்ரீகாந்த் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரங்களில் சிம்புவுக்கும் அதிக முக்கியத்துவம் தர தொடங்கியுள்ளனர். ஆனால் இதில் சிம்பு கவுரவ வேடத்தில் தான் வருவார். ஹன்சிகாவுக்கு தமிழில் வேறு படங்கள் இல்லாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் இவரது படம் வெளியாகிறது.