தெஹ்ரீக் அமைப்பினர் 350 பேர் விடுவிப்பு

26.10.2021 17:01:12

தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் - இ - லபைக் பாகிஸ்தான் என்ற அமைப்பின் எச்சரிக்கைக்கு பணிந்து, கைது செய்த 350 பேரை பாக்., அரசு விடுதலை செய்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சில் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் வெளியானதைக் கண்டித்து, தெஹ்ரீக் - இ - லபைக் பாகிஸ்தான் என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது. 'போராட்டத்தை கைவிட வேண்டுமென்றால், பிரான்ஸ் துாதரை வெளியேற்றுவதுடன், அந்நாட்டு பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்' என்றும் அந்த அமைப்பு நிபந்தனை விதித்தது. இதை பாக் அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதன் பின், பாக்., அரசு பிரான்ஸ் துாதரை வெளியேற்றாமல் 'சிறப்பு குழு உருவாக்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, பார்லி.,யில் 'பல்டி' அடித்தது. அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுவும் ஒருமுறை கூட கூடவில்லை. இதைக் கண்டித்து தெஹ்ரீக் - இ - லபைக் தலைவர் சாத் உசேன் ரிஸ்வி தலைமையில் மீண்டும் போராட்டம் நடந்தது. இதையடுத்து பொது அமைதிக்கு எதிராக நடப்பதாக கூறி, ரிஸ்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். தெஹ்ரீக் - இ - லபைக் அமைப்பும் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் ரிஸ்வியை விடுதலை செய்யக் கோரி, அவரது அமைப்பினர் நாடு முழுதும் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தனியே போராட்டம் நடத்தின. போராட்டத்தை அடக்க முயன்ற போது நடந்த வன்முறையில் தெஹ்ரீக் அமைப்பைச் சேர்ந்த ஏழு பேரும், மூன்று போலீசாரும் பலியாயினர். இதையடுத்து இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி ஆகிய நகரங்களின் எல்லைகள் மூடப்பட்டன. இந்நிலையில் ரிஸ்வியை விடுவிக்காவிட்டால் இஸ்லாமாபாத் வரை நீண்ட பேரணி நடத்தி முற்றுகையிடப் போவதாக தெஹ்ரீக் அமைப்பு எச்சரித்தது.

நிலைமை மேலும் மோசமாவதை தடுக்க, கைது செய்யப்பட்ட தெஹ்ரீக் - இ - லபைக் அமைப்பினர் 350 பேரை, பாக்., அரசு நேற்று விடுதலை செய்தது. இதனால் அந்த அமைப்பினர் பேரணியை, முரிட்கி பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். ''பாக்., பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பியதும் ரிஸ்வி விடுதலை குறித்து முடிவு செய்யப்படும்,'' என, அந்நாட்டு சட்டத் துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.