சூப்பர் ஸ்டார் நடிகரோடு இணையும் மோகன் ராஜா!

27.05.2024 07:10:00

2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம். இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.
 

இதையடுத்து இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கான காரணம் படத்தின் பட்ஜெட்தான் என சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்று இயக்குனர் மோகன் ராஜா அறிவித்தாராம். இதைக் கேட்டு தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியாகிவிட்டதாம். ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோரின் தற்போதைய மார்க்கெட்டின் படி இந்த தொகையில் படம் எடுத்தால் கண்டிப்பாக மிகப்பெரிய நஷ்டம் வரும் என்பதால் இப்போதைக்கு படத்தை தள்ளிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

இதனால் இப்போது மோகன் ராஜா தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அவர் அடுத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்துக்கான கதையை கதாசிரியர் பிவிஎஸ் ரவி எழுதியுள்ளார். படம் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மோகன் ராஜா, சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் என்றொரு படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.