ரத்னம் - விமர்சனம்

30.04.2024 00:13:19

தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : விஷால், ப்ரியா பவானி சங்கர், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர்.

இயக்கம் : ஹரி

மதிப்பீடு : 2.5/5

'தாமிரபரணி', 'பூஜை' என இரண்டு வெற்றி படங்களுக்குப் பிறகு மூன்றாவது படமான 'ரத்னம்' எனும்  படத்தில் இணைந்திருக்கும் ஹரி- விஷால் கூட்டணி- ரசிகர்களுக்கு பரபரப்பான பொழுது போக்கிற்கு உத்திரவாதம் அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.‌

சிறிய வயதில் தாயை இழக்கிறார் ரத்னம்( விஷால்).   சந்தையில் பணியாற்றும் ரத்னத்திற்கு அடைக்கலம் கொடுத்து, அரவணைத்த பன்னீர் செல்வத்திற்காக ( சமுத்திரக்கனி) கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார்.

தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு , பன்னீர்செல்வம் வேலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதை அறிந்து அவருக்கு கீழ் பணியாற்றும் நம்பிக்கைக்குரிய அடியாளாக மாறுகிறார்.  இந்நிலையில் வேலூருக்கு மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத வரும் மல்லிகாவிற்கு ( ப்ரியா பவானி சங்கர்) எதிரிகள் தொல்லை கொடுக்கிறார்கள்.

மல்லிகாவை பார்த்தவுடன் அன்பு காட்டுகிறார் ரத்னம். அத்துடன் அவருக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அத்துடன்  நிற்காமல் அவருக்கு முழு நேர பாதுகாவலராகவும் மாறுகிறார். மல்லிகா மீது ரத்னத்திற்கு அளவு கடந்த பாசம் ஏற்படுவது ஏன்? மல்லிகாவை வில்லன்கள் துரத்தி கொல்ல துடிப்பது ஏன்? இதனை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.

பொதுவாக ஹரி திரைப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் அழுத்தமாகவும், வலிமையாகவும் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங். விஷாலுக்கும்- பிரியா பவானி சங்கருக்கும் இடையேயான அன்பிற்கும், அதன் பின்னணிக்குமான காட்சிகளில் பக்கா சினிமாத்தனம் தெரிகிறது இதனால் ரசிக்க முடியவில்லை.

முழு நீள எக்சன் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பிய ஹரி அதற்கான கதையை தெரிவு செய்வதில் கோட்டை விட்டிருக்கிறார். பிரதான கதையை விட கிளைக் கதைகள் அதிகம் என்பதும், அவற்றின் நீளம் அதிகமாக இருப்பதாலும் ரசிகர்களுக்கு தொய்வை தருகிறது.

ரத்னமாக நடித்திருக்கும் விஷால் எக்சன்  காட்சிகளில் அதகளம் செய்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் அவருடைய வசன உச்சரிப்பு எரிச்சலை தருகிறது.

பன்னீர்செல்வமாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி -அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு தரமான நடிப்பை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். சில இடங்களில் இவருக்கான காட்சிகள் மாஸாக இருப்பதால் விஷாலை பல இடங்களில் விஞ்சுகிறார்.

மல்லிகா - லோகநாயகி  எனும் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் இரண்டு கதாபாத்திரத்திற்கும் உரிய வித்தியாசமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் தான் ஒரு தேர்ச்சி பெற்று நடிகை என்பதை நிரூபித்து மனதில் இடம் பிடிக்கிறார்.

வசனங்களில் சமகால அரசியல் நையாண்டி இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்க்கிறது.  சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தொலைந்து போன காமெடி ட்ராக்கை ஹரி புதுப்பித்திருக்கிறார் ஆனால யோகி பாபுவும், மொட்டை ராஜேந்திரனும் வழக்கம்போல் உருவக்கேலி காமெடியை செய்துள்ளதால் ரசிகர்களிடம் எடுபடவில்லை.  இருப்பினும் சில 'ஒன் லைன் பஞ்ச்'சுகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

சிங்கிள் ஷாட் எக்சன் காட்சிகள் எக்சன் பிரியர்களை ஈர்க்கவே இல்லை. மூத்த சண்டை பயிற்சி இயக்குநர் கனல் கண்ணன் வடிவமைத்த இந்த சண்டைக் காட்சியில் புதுமை இல்லாததாலும்  அவசரம் அவசரமாக எடுக்கப்பட்டிருப்பதாலும் எந்தவித கவனத்தையும் பெறாமல் கடந்து போகிறது.

படத்தொகுப்பில் ஹரி தன் வழக்கமான பாணியை கைவிட்டு, நிதானமாக சொல்லும் போக்கை கையாண்டிருந்தாலும் அவர் பெரிது நம்பிய பிளாஷ்பேக் காட்சி கை கொடுக்கவில்லை. ஏனெனில் இதற்காக எழுதப்பட்ட திரைக்கதையில் முழுமை இல்லை என்பதுதான் உண்மை.

படத்தை ரசிக்க வைப்பதற்கு ஒளிப்பதிவாளர் சுகுமாரும், பின்னணி இசையமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் தான் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.  இவர்களுக்கு ஸ்பெஷலாக பாராட்டை தெரிவிக்கலாம்.

மருத்துவக் கல்லூரி நிலப்பிரச்சனை - தமிழக- ஆந்திரா ‌மாநில எல்லை பிரச்சனை- ரத்தம் தெறிக்கும் எக்சன் காட்சிகள்- தாய்ப்பாச சென்டிமெண்ட்- காமெடி என ஒரு எக்சன் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்கள் இருந்தாலும் படத்தை முழுமையாக பட மாளிகையில் உட்கார்ந்து ரசிக்க முடியவில்லை. ஏனெனில் உச்சகட்ட காட்சியும், அதற்கு முன்னரான காட்சியும் ரசிகர்களை இருக்கையில் அமரவிடாமல் நெளிய வைக்கிறது. இருந்தாலும் விஷால் எனும் ஒற்றை நபருக்காக பொறுமையுடன் உட்கார நேர்கிறது.

ரத்னம்- பட்டை தீட்டப்படாத கல்.