’தமிழ் கைதிகளின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன’
தற்போது சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் சிறைக் கைதிகளையும் முழுமையாக விரைந்து விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, வழக்குகளை தொடராது தமிழ் இளைஞர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்தார்.
நேற்றுப் பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் 12 ஆயிரம்பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் அதிகளவான தமிழ் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இதேபோல, தற்போதும் சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் சிறைக் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும். ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் இதனை கூறவில்லை. இவர்களில் பலர் வழக்குத் தாக்கல் செய்யப்படாது, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்தார்.