முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு

25.07.2023 18:00:00

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுக்கோப்பை வழங்கினார்

மாவட்ட அளவிலான போட்டிகளில் 3,76,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாநில அளவிலான இறுதிப் போட்டிகளில் 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்
சென்னை. ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் "முதலமைச்சர் கோப்பை 2023" மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளையும், 27-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணியைச் சார்ந்த 22 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் நமது பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளையும், பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இப்போட்டிகளை நடத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் 3,76,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் ஜுலை 1-ந் தேதி முதல் ஜுலை மாதம் 25-ந் தேதி வரை 17 இடங்களில் நடத்தப்பட்டது.