அர்ச்சுனா உள்ளிட்ட மூவரை முன்னிலையாக நீதிமன்றம் உத்தரவு!

13.10.2026 08:54:22

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றில் ஆஜராகாத மூவரையும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வை. விஜயகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியர் சுகுணன் தொடர்பில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகியோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறித்த நபர்கள் வைத்தியர் சுகுணன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதற்குத் தடை விதித்து கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன், நேற்று நீதிமன்றில் ஆஜராகுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட சில எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியது. இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என அவர்கள் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

வழக்குத் தொடுப்பவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் மற்றும் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து, நீதிமன்றில் ஆஜராகாத பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா, அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய மூவரையும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டதுடன், வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, இந்த வழக்கு முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அல்ல என்றும், வைத்தியர் சுகுணன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும் என்றும் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்த வழக்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையாகச் சித்தரித்து, அரசியல் நோக்கங்களுக்காகச் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.