மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

08.09.2021 09:08:45

மெக்சிகோவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவின் தலைநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் டவுண்டவுன் டூலா நகரில் நேற்று (செப்.,7) அதிகாலை திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த 16 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது ஒருபுறம் இருக்க, மெக்சிகோவில் உள்ள குரெரோவின் அகாபுல்கோவில் இந்திய நேரப்படி இன்று (செப்.,8) காலை 7:17 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானதாகவும், இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகரம் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகவும் நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதை அடுத்து, பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.