தலிபான்கள் அரசுக்கு உதவிக்கரம் நீட்டும் சீனா

10.09.2021 14:19:37

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள அரசினை அங்கீகரித்துள்ள சீனா முதற்கட்டமாக 220 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆப்கானில் தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் முதற்கட்டமாக 220 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குவதாக கூறினார். சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்குறுதிகளை தலிபான்கள் நிறைவேற்ற வேண்டும் என்று வாங்-யி வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கன் மக்களுக்கு பொருளாதார மனிதநேய உதவிகளை வழங்கும் கடமை மற்ற நாடுகளை விட அமெரிக்காவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் தான் அதிகம் இருப்பதாக வாங்-யி கூறினார். இதனிடையே காபூல் விமான நிலையத்தில் இருந்து முதல் சரவதேச விமானம் நேற்று புறப்பட்டு சென்றது.

இதில் இரட்டை குடியுரிமை பெற்ற அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மன், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 113 பேர் கத்தார் சென்றடைந்தனர். கத்தாரில் இருந்து 113 பயணிகளும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காபூல் சர்வதேச விமான நிலையம் புராணமைக்கப்பட்டு முதல் விமானம் புறப்பட்டு சென்ற நிலையில் வரும் நாட்களில் சர்வதேச விமான போக்குவரத்தை அதிகப்படுத்த தலிபான் அரசு திட்டமிட்டுள்ளது.