புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்கிய ஜேர்மனி!
ஜேர்மனியில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மனித உரிமைகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையானது ஜேர்மன் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டிருந்தது. |
இந்த நிலையில் கடந்த வாரம் உள்ளூர் விழா ஒன்றில் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவாளர் என்பது வெளிச்சத்துக்கு வந்ததும், நாடுகடத்தும் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்ற அழுத்தம் கூட்டணி அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. மேலும், ஜூன் மாதம் ஜேர்மன் பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆப்கான் நாட்டவர் கொலை செய்துள்ளதும் அரசாங்கத்தை சிக்கலில் தள்ளியது. இந்த நிலையில் வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்கம் புலம்பெயர் கொள்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக மிக மோசமான குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கான் நாட்டவர்கள் வெள்ளிக்கிழமை நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி, சிரியா நாட்டவர்களையும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட நிலையில் நாடுகடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |