வட இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல்

04.08.2022 11:35:07

கோட்டாபய போன்று அல்லது வேறு சிங்களத் தலைவர்கள் போன்று ரணில் விக்ரமசிங்கவைத் தமக்குரியவாறு கையாள முடியாது என்று அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு நன்கு தெரியும். சீனாவும் தனக்குரியவாறு ரணில் விக்ரமசிங்கவை முழுமையாகக் கையாள முடியாது. பொருளாதார நெருக்கடியின் பின்னரான சூழலில் முதன்முறையாகச் சீனாவிடம் இருந்து கடன் பெறுவது தொடர்பாக இலங்கை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து சுமார் நன்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற்றுள்ள நிலையில். மேலும் கடன்களைப் பெறுவது குறித்து இலங்கை, இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது இலங்கை. இந்த நிலையில், சீனாவில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கோகண, இலங்கையின் மிகப் பெரிய நிதியுதவியாளர் சீனா என்று வர்ணித்துள்ளார்.

அதுமாத்திரமல்ல இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, சீனா இலங்கைக்கு நிதியுதவிகள் வழங்கவில்லை என்ற கருத்தை மறுதலிக்கும் தொனியில், அதுவும் அமெரிக்க ஊடகமான ரொய்டருக்கு விளக்கமளித்துள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட வேறுபல நாடுகளுக்குச் சீனா உதவி வழங்கியதால், இலங்கைக்கு உதவியளிக்க முடிவில்லை என்றும், இலங்கை மாத்திரம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தால், சீனா இலங்கைக்கு உடனடியாக உதவி வழங்கியிருக்கும் என்றும் பாலித கோகண விபரித்திருக்கிறார்.

ஆகவே இலங்கை சீனாவிடம் இருந்தே அதிகளவு உதவிகளைப் பெறும் என்றும், சீனாதான் இலங்கையின் நிதி நண்பன் என்ற தொனியிலும் பாலித கோகண அமெரிக்க ஊடகத்துக்குக் கருத்து வெளியிட்டதன் மூலம், இந்தியாவிடம் இருந்து மேலும் உதவிகளை இலங்கை எதிர்பார்க்கின்றதா அல்லது இலங்கையில் வேறு நலன்களை இந்தியா எதிர்ப்பார்ககக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் எந்த உதவியையும் இலங்கை எதிர்பார்க்க முடியாது என்று அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டெபோரா ப்ரோட்டிகம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை பெறவுள்ள நிதியுதவிகள் குறித்த எச்சரிக்கை 

 

சீனாவிடம் இருந்து அதிகளவு உதவிகளை இலங்கை எதிர்பார்ப்பதாக பாலித கோகண கூறிய பின்னரே, அமெரிக்கப் பேராசிரியர் இவ்வாறு கூறியிருக்கிறார் போலும். இலங்கை அதன் அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீளும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவிச் செயற்திட்டம் இலங்கைக்குக் கிட்டப்போவதில்லை என்று பேராசிரியர் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். இலங்கையில் அரசியல் நெருக்கடி தொடரும் சூழலில், சர்வதேச நாணய நிதியம் பேச்சு நடத்த முடியாது எனவும் பேராசிரியர் டெபோரா ப்ரோட்டிகம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வுழங்கப்படுகின்ற கடன்களை மீளப் பெறுவதற்குரிய உத்தரவாதங்களை இலங்கையிடம் இருந்து பெற முடியாது என்ற தொனியில் கருத்திட்டுள்ள அமெரிக்கப் பேராசிரியர், சீனா போன்ற நாடுகளிடம் இலங்கை பெறவுள்ள நிதியுதவிகள் குறித்த எச்சரிக்கை ஒன்றை ஏற்கனவே விடுத்திருந்தார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே இதன் பின்னணயில், சீனா தொடர்பாக இலங்கைத் தூதுவர் பாலித கோகண கூறியுள்ள கருத்து, அமெரிக்க - இந்திய அரசுகளின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகளில் மேலும் பாரிய தாக்கத்தைச் செலுத்துக்கூடிய ஆபத்துக்கள் எழக்கூடிய வாய்ப்புகள் உண்டெனலாம். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 2016 ஆம் ஆண்டு தொன்னுாற்று ஒன்பது வருடக் குத்தகைக்கு இலங்கை சீனாவுக்கு வழங்கயிருந்தது.

அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். ரெய்டெர் செய்திச் சேவைக்குக் கருத்து வெளியிட்ட தூதுவர் பாலித கோகண, இந்த விடயத்தை ஞாபகமூட்டியதுடன், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனா தொடர்ந்து முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.'

சீனாவின் தளமாக இலங்கை

சீனாவிடம் இருந்து இலங்கை கடன் பெறுவது அமெரிக்க - இந்திய அரசுகளுக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இலங்கை சீனாவின் தளமாக மாறிவிடக் கூடாது என்பதே அமெரிக்க இந்திய அரசுகளின் கரிசனை. கோட்டாபய ராஜபக்ச அதிபராகப் பதவி வகித்திருந்தபோது, இலங்கையில் சீனா மேற்கொண்ட பல முதலீடுகள் தொடர்பாக முரண்பட்டிருந்தார் என்பதை அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களிடம் ஏலவே கூறியிருந்தனர்.

அதாவது அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் நலன் அடிப்படையில் கோட்டாபய செயற்பட்டார் என்பதே அந்தத் தகவல். இதன் பின்னணியிலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, சீனா இலங்கைக்கு நிதியுதவி வழங்கவில்லை என்று கருத்துக்களும் உண்டு. ஆனால் இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதியுதவிகளை சீனா பாராட்டியிருந்தது. ஆகவே இதன் பின்புலத்தில் தற்போது அதிபராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க - இந்திய அரசுகளையும். சீனாவையும் சமாந்தரமாகக் கையாள்வார் என்பது வெளிப்படை. ஏனெனில், 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புகுடன் அமைக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தின்போது, அவ்வாறன அணுகுமுறையை ரணில் விக்ரமசிங்க கையாண்டிருந்தார்.

ஆனால் அப்போது அதிபராகப் பதவி வகித்திருந்த மைத்திரிபால சிறிசேன அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதாவது புவிசார் அரசியல் பின்னணியும், இலங்கைக்குத் தேவையான கடன்திட்ட முறைகள் பற்றிய புரிதலும் மைத்திபால சிறிசேனவிடம் இல்லை என்பதை அவருடைய நடைமுறைகள் அன்று வெளிப்படுத்தியிருந்தன. இதனலோயே ரணில் விக்ரமசிங்கவின் அந்த முயற்சி தோல்வியடைந்து ஆட்சியும் கவிழ்ந்தது.

ஆனாலும் ரணில் விக்ரமசிங்க தற்போது அதிபராகப் பதவியேற்றுள்ள சூழலில், புவிசார் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் அமெரிக்க இந்திய அரசுகளை ஒருவிதமாகவும், சீனாவை வேறு முறையிலும் கையாள முடியுமா என்பதே இங்கு கேள்வி. ஏனெனில் ஆப்கானிஸ்தானில் இருந்து 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைகள் வெளியேறிய பின்னரான சூழலில், இந்தோ – பசுபிக் விவகாரம் சூடு பிடித்து வருகின்றது.

வட இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல்

இந்த விவகாரம் குறித்து ஏலவே இப் பத்தி எழுத்தில் பல தடவைகள் ஆதாரங்களோடு விபரிக்கப்பட்டிருந்தது. இந்தோ – பசுபிக் விவகாரம் மாத்திரமல்ல, வட இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பின்னணியிலேயே இலங்கையை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென இந்தியா கருதியது. அதற்கு அமெரிக்காவும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. அதிலே மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் இந்த இடத்திலேதான் இலங்கைத்தீவுடன் இணைந்திருக்கும் இந்தோ – பசுபிக் பாதுகாப்புக் குறித்த விடயததில் இந்தியாவின் கவனம் சற்றுக் குறைவடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ஏனெனில் பாகிஸ்தான் - சீனா போன்ற எதிரி நாடுகளின் எல்லைகளோடு வட இந்தியா நிலத் தொடர்புகளைக் கொண்டிருக்கிறது.

ஆகவே அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடும் சிந்தனை இந்தியாவுக்கு எழுந்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் விலகியதும், தலிபான்கள் மூலமாக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வட இந்தியாவுக்குள் ஊடுருவலாமென அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்ரகன்கூட எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவின் பாக்ஸ் தொலைக்காட்சி இது தொடர்பான எச்சரிக்கையைப் பல தடவைகள் விடுத்திருந்தது.

ஆகவேதான் இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விடயத்தில், அமெரிக்கா உருவாக்கிய குவாட் அமைப்பில்கூட 2020 இற்குப் பின்னர் இந்தியா உரிய முறையில் செயற்படவில்லை. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அமெரிக்க இந்திய அரசுகளுக்கிடையே எழுந்தாலும், இலங்கை விவகாரத்தில் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரே புள்ளியிலேயே பயனிக்கின்றன என்பது இங்கே வெளிப்படை. ஆனால் இவ்வாறான புவிசார் அணுகுமுறைகளைக் கோட்டாபய ராஜபக்ச உரிய முறையில் கையாளவில்லை. எடுத்த எடுப்பிலேயே அமெரிக்க - இந்திய அரசுகளின் நலன் அடிப்படையில் இலங்கையில் பல முதலீடுகளுக்கும், வேறு பல அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இடமளித்தார்.

ஆனால் இந்த விவகாரத்தைப் புவிசார் அரசியல் பின்னணியைச் சரியக உற்று நோக்கக்கூடிய வல்லமை படைத்த ரணில் விக்ரமசிங்க சாதுரியமாகக் கையாள்வார் என்பது சர்வதேச இராஜதந்திரிகள், மற்றும் அமெரிக்க இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். கோட்டாபய போன்று அல்லது வேறு சிங்களத் தலைவர்கள் போன்று ரணில் விக்ரமசிங்கவைத் தமக்குரியவாறு கையாள முடியாது என்று அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு நன்கு தெரியும். சீனாவும் தனக்குரியவாறு ரணில் விக்ரமசிங்கவை முழுமையாகக் கையாள முடியாது. அதாவது ரணில் விக்ரமசிங்க கைப்பொம்மையாக இருக்கக்கூடியவர் அல்ல என்ற அச்சம் இந்த நாடுகளிடம் உண்டு.

ஆகவே கோட்டாபய ராஜபக்ச வெளியேறிய பின்னரான சூழலில், வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு மக்களின் வாழ்க்கைச் சுமை குறைவடையக்கூடிய அளவுக்குப் பொருளாதார நெருக்கடித் தீர்வு வருகின்றதோ இல்லையோ, அமெரிக்கா - இந்தியா – சினா போன்ற நாடுகள் ரணில் விக்கிரமசிங்கவை எவ்வாறு கையாள்வது என்பதில் ஏட்டிக்குப் போட்டியாக வகுக்கவுள்ள உத்திகளும், அதனால் ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்ளவுள்ள அரசியல். பொருளாதார நெருக்கடிகளுமே மேலோங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

புவிசார் அரசியல் நெருக்கடி 

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் வெளிப்படையாகவும் வேகமாகவும் தோற்றம் பெற்ற இந்தோ – பசுபிக் விவகாரம், 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறிய பின்னரான சூழலில், இந்தியாவுக்கான தலையிடிகளை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது 2009 ஆண்டுக்கு முன்னரான காலத்திலேயே சிங்கள ஆட்சியாளர்களை உரிய முறையில் இந்தியா கையாண்டிருந்தால், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான தலையிடியைக் கொடுக்கக்கூடிய புவிசார் அரசியல் நெருக்கடி புதுடில்லிக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இலங்கை ஒருபோதும் அமெரிக்க இந்திய நலன்களுக்கு மாறாகச் செயற்பட முடியாது. ஆனால் சீனாவிடம் இருந்து உதவிகள் பெறுவதை அல்லது இலங்கையைத் தளமாக மாற்ற சீனா எடுக்கும் நகர்வுகளுக்கு இலங்கை கொடுக்கவுள்ள ஒத்துழைப்புகளை அமெரிக்க இந்திய அரசுகள் கட்டுப்படுத்தலாமே தவிர. தடுக்கவே முடியாது. அதுவும் ரணில் விக்ரமசிங்க போன்ற நுட்பமான சிங்கள இராஜதந்திரி ஒருவருடன் அமெரிக்க இந்திய அரசுகள் தமக்கு ஏற்ற விருப்பங்களை உடனடியாக முன் நகர்த்த முடியாது.

இதுவரை காலமும் வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் ஈழத்தமிழ் மக்களுக்கிருந்த உறவுகளையும் தமது பிரித்தாளும் தந்திரத்தினால் மிக நுட்பமாகக் கையாண்ட இந்தியா, முழுமையான அதிகாரம் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவை எவ்வாறு கையாளவுள்ளது என்ற கேள்விகளும் இல்லாமலில்லை. இது இந்தியாவுக்குச் சவால் மிக்க அரசியல் சூழல். அதேநேரம் இலங்கையின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்து அந்நியச் செலவானியே இல்லாத ஒரு நிலையில், அமெரிக்கா - இந்தியா மற்றும் சர்வதேசத்தை நம்பி அதிபராக பதவியேற்று ரணில் விக்ரமசிங்க பௌத்த சமய அடையாளத்துக்காகச் சீனாவோடு உறவைப் பேண வேண்டும் என்று விரும்புகின்ற பௌத்த சிங்கள மக்களுக்கான ஆட்சியை செயற்படுத்துவதிலும் பல சவால்களை எதிர்கொள்வார் என்பதும் கண்கூடு.

கோட்டாவின் வெளியேற்றத்தின் பின்னரான சூழலில் தலைநகர் கொழும்பில் அமெரிக்க - இந்திய எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றது. காலிமுகத்திடல் போராட்டத்தில் இணைந்து செயற்பட்ட பல அமைப்புகளும் தற்போது இந்திய எதிர்ப்பைக் கையில் எடுத்துள்ளன. பௌத்த தேசியவாதம் மீண்டும் தனது இருப்பிடத்துக்குத் திரும்புகின்றது.