அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்!

17.02.2026 15:11:26

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அக்கட்சியில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சரான ந. சுப்பிரமணியன் விஜய் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்.

ந. சுப்பிரமணியன் கடந்த 2006 முதல் 2011 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அதனை தொடர்ந்து, 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனுபவம் வாய்ந்த பழைய தலைவர்கள் விஜய்யை நோக்கி செல்வது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இவரை தொடர்ந்து அதிமுக மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த மேலும் சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்த நாட்களில் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.