வளர்ச்சியை நோக்கி அருணாச்சல பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசத்தில் வளர்ச்சியை விரைவுபடுத்த அரசாங்கம் முன்பில்லாத அளவிற்கு பணிகளைச் செய்துள்ளது, தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அதன் பங்கைக் கருத்தில் கொண்டு நவீன உள்கட்டமைப்புகள் கட்டமைக்கப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 36வது மாநில தினம் மற்றும் அதன் பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மக்களுக்கு பிரதமர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 21ம் நூற்றாண்டில் இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு கிழக்கு மற்றும் குறிப்பாக வடகிழக்கு பகுதிகள் உந்து சக்தியாக இருக்கும் என்பதில் தான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அருணாச்சலப் பிரதேசத்தை கிழக்கு ஆசியாவின் முக்கிய நுழைவாயிலாக மாற்றுவதற்கு அரசாங்கம் முழு சக்தியுடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில மக்களிடம் உறையாற்றிய பிரதமர், "'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் அவுர் சப்கா பிரயாஸ்' என்ற இந்த பாதை அருணாச்சலத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும், இளம் முதல்வர் பெமா காண்டுவின் தலைமையில் எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அரசாங்கம் அங்கீகரிப்பதில் நான் திருப்தி அடைகிறேன். உங்கள் நம்பிக்கை அரசாங்கத்தை கடினமாக உழைக்கவும் அதிக வலிமையுடன் முயற்சிகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கிறது" என்று மோடி கூறினார்.
மேலும் அவர்,"இந்த உணர்வோடு, கடந்த ஏழு ஆண்டுகளில் அருணாச்சல பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த அரசாங்கம் முன்பில்லாத அளவிற்கு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பங்கைக் கருத்தில் கொண்டு, நவீன உள்கட்டமைப்புகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இடா நகருடன், வடகிழக்கில் உள்ள அனைத்து தலைநகரங்களையும் ரயில் மூலம் இணைப்பதே எங்களது முன்னுரிமை" என்று கூறினார்.
மேலும் அருணாச்சலம் இயற்கை மற்றும் கலாச்சாரத்துடன் இணக்கமாக முன்னேறி வருவதாகவும், சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் சுயஉதவி குழுக்கள் ஆகிய துறைகளில் வளர்ச்சிக்கான முதலமைச்சரின் முயற்சிகள் குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், "அருணாச்சல பிரதேச மக்களுக்கு அவர்களின் மாநில தின வாழ்த்துகள். மாநில மக்கள் அவர்களின் அற்புதமான திறமை மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். வரும் காலங்களில் மாநிலம் வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டட்டும்." என்று பதிவிட்டுள்ளார்