புறக்கணித்த ஜே.வி.பி!

06.07.2022 09:20:00

 

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் எதிர்த்தரப்பினர் கலந்துரையாடல் ஒன்று மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது

இந்தக் குழுவின் ஆலோசகர்களாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் செயற்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தமிழ் கட்சிகள் சார்பாக ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பழனி திகாம்பரம், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்ட அதேவேளை ஜே.வி.பி. கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு 113 பெரும்பான்மையை பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அரச தலைவருடன் இணைந்து செயற்படுவது குறித்து முடிவுக்கு வரவில்லை எனவும் தமது திட்டம் குறித்து எதிர்காலத்தில் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.