எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஜனாதிபதி இரகசிய விசாரணை
இந்த புத்தாண்டில் நடைமுறைச்சாத்தியமாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். கோவிட் தொற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதனால், பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“எரிவாயு தொடர்பில் சிக்கல் உள்ளது. எரிவாயு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த காஸ் வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் கொழும்பு 07 பகுதியில் எரிவாயு வெடிப்பதில்லை. வட மாகாணத்தில் எரிவாயு வெடிப்பதில்லை. கண்டி, குருநாககல் பகுதிகளில் எரிவாயு வெடிக்கவில்லை.
எனவே, இந்த எரிவாயு வெடிப்புகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஜனாதிபதி இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த எரிவாயு வெடிப்புகள் குறித்து நாட்டு மக்கள் இப்போது ஆர்வமாக உள்ளனர். மக்கள் இப்போது எரிவாயு பயன்படுத்த பயப்படுகிறார்கள். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறேன்’ என ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.