பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயம் இரத்து

22.09.2021 03:15:03

பாகிஸ்தானுக்கான இருபாலார் கிரிக்கெட் விஜயத்தை இரத்துச் செய்த இங்கிலாந்து சாக்குப்போக்கு கூறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ரமிஸ் ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இங்கிலாந்து தனது சகோதரத்துவ உறுப்பினரை கைவிட்டுவிட்டு சாக்குப்போக்கு கூறுவதுடன் இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் மனநிலை நலனில் கொண்டுள்ள அக்கறையே காரணம் என தெரிவிப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005க்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து ஒரு குறுகிய கால கிரிக்கெட் விஜயம் செய்யவிருந்தது இதுவே முதல் தடவையாகும்.

இங்கிலாந்தின் ஆடவர் அணியும் மகளிர் அணியும் ராவல்பிண்டியில் அக்டோபர் 14, 15ஆம் திகதிகளில் 2 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிகளை எதிர்த்தாடுவதாக இருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆடவர் அணிகள் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற ஐக்கிய அரபு இராச்சியம் செல்லவிருந்தன.

அதேவேளை இங்கிலாந்து மகளிர் அணியினர் பாகிஸ்தானில் தங்கியிருந்து 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருந்தனர்.

ஆனால், நியூஸிலாந்து அணியினர் ஒருநாள் தொடர் ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தனது பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்தை இரத்துச் செய்தமை இங்கிலாந்தின் கிரிக்கெட் விஜயத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

‘குறிப்பிடத்தக்க’ மற்றும் ‘நம்பகரமான’ பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நியூஸிலாந்தின் உளவுத்துறை பிரிவினர் தனது நாட்டு அரசுக்கு அறிவித்ததை அடுத்து பாகிஸ்தானுடனான இருவகை தொடர்களை இரத்துச் செய்யுமாறு நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் பணித்தது.

இதனை அடுத்து நியூஸிலாந்து தனது பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்தை இரத்துச் செய்துவிட்டு துபாய் பயணமானது.

இந் நிலையில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தொற்றுநோய் காலத்தில் உயிரியல் குமிழிக்குள் இருப்பதால் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஏற்படும் அழுத்தங்கள் ஆகியவற்றை காரணம் காட்டி பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் விஜயத்தை இரத்துச் செய்வதாக இங்கிலாந்து, நேற்று (20) அறிவித்தது.

‘இந்த கிரிக்கெட் விஜயத்தை இங்கிலாந்து இரத்துச் செய்தமை பெரும் ஏமாற்றம் அளிக்கின்றது. அத்துடன் மிகவும் அவசியமான வேளையில் சகோதரத்துவ கிரிக்கெட் உறுப்பினரை இங்கிலாந்து கைவிட்டுவிட்டது’ என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர், முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரருமான ரமிஸ் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘இதிலிருந்து மீண்டெழுவோம். உலகின் தலைசிறந்த அணியாக பாகிஸ்தான் உருவெடுப்பதற்கு இது விழித்தெழச் செய்யும் ஓர் அழைப்பாகும். எனவே சாக்குப்போக்கு கூறமால் பாகிஸ்தானை எதிர்கொள்ள மற்றைய அணிகள் தயாராக வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் -19 பாதிப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த வருட கோடை பருவத்தில் இங்கிலாந்துக்கு நல்லெண்ண விஜயம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் 3 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருந்தது. அதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயம் அப்போது திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தனது கிரிக்கெட் விஜயத்தை இங்கிலாந்து இரத்துச் செய்தமை பாகிஸ்தானில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எவ்வாறாயினும் இந்த கிரிக்கெட் விஜயம் இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணங்களை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் சபை, கடந்த இரண்டு வருடங்களாக ஒத்துழைப்பு நல்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு நன்றி தெரிவித்தது.

மேலும்,’இந்த கிரிக்கெட் விஜயம் இரத்துச் செய்யப்பட்டமை பாகிஸ்தான் கிரிக்கெட்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றோம்’ என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்தது.

அத்துடன் அடுத்த வருடம் முழுமையான டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறும் என்ற உறுதிமொழியையும் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.