12 பிரம்படி, 18 வருடங்கள் சிறை: பணிப்பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு, சிங்கப்பூரில் தண்டனை

08.08.2023 10:00:18

சிங்கப்பூரில் சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழக்கம் கலையரசன் ஏற்கெனவே 16 வருடங்கள் தண்டனை பெற்றவர் சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் இங்கு பிரம்படி வழங்குவதும் வழக்கம். ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்று அதனை அனுபவித்த பிறகும் மீண்டும் அதே குற்றத்தை ஒருவர் புரிந்தால் அவர் மீது சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய கடுமையான தண்டனைகள் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் வசித்த மார்க் கலைவாணன் கலையரசன் (44) என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக 16 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவர். 2017-ம் வருடம் சிறையில் இருந்து வெளியே வந்தார். சில நாட்களிலேயே, சிறையிலிருந்து வெளியே வந்த கலையரசன் ஒரு அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு ஃப்ளாட்டில் அத்துமீறி நுழைந்தார். அந்த வீட்டில் ஒரு பணிப்பெண் துணிகளை மடித்துக்கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். போதையில் இருந்த கலையரசன், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். அப்பெண்ணின் கூக்குரலால் பிடிக்கப்பட்ட மார்க், கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர் கொண்டார். இதன்படி, கலையரசன் சமூகத்தில் உள்ள பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர் என வாதிடப்பட்டு அவருக்கு 18 வருடம் தடுப்பு காவல் சிறை தண்டனை (Preventive Detention) வழங்கப்பட்டது. இத்துடன் சிங்கப்பூரின் தண்டனை சட்டத்தின்படி 12 பிரம்படிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இத்தகைய கடுமையான தண்டனைகள் அவசியம் என அந்நாட்டு அரசாங்கம் பலமுறை கூறி வந்திருக்கிறது.