புய் தான் சன்-ஜனாதிபதி சந்திப்பு

14.02.2025 08:23:40

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு வியட்நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக வியட்நாம் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 55 வருடங்களாக வியட்நாமிற்கும் இலங்கைக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் நம்பிக்கை மற்றும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை சாதகமாக மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு இரு நாடுகளுக்கும் போதிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , விவசாயம், கல்வி, மதம், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் விமான சேவைகள் போன்ற துறைகளில் இலங்கையில் முதலீடு செய்ய வியட்நாம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்