திரைமறைவில் காய் நகர்த்தல்கள்..

08.07.2022 10:23:00

நெருக்கடியினை மேலும் தீவிரப்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை அடைய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச முயற்சிக்கிறார் என இலங்கை கம்யூனிச கட்சியின் உப தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற பேட்டி ஒன்றில் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. பசில் ராஜபக்சவின் தவறான பொருளாதார கொள்கை முழு நாட்டையும் இல்லாதொழித்துள்ளது.

மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினாலும் அரசாங்கத்தின் இயக்க சக்தியாக பசில் ராஜபக்சவே உள்ளார்.

எரிவாயு மற்றும் எரிபொருள் கொள்வனவு விவகாரத்தில் இவரது தலையீடு உள்ளமை பல்வேறு காரணிகள் ஊடாக வெளிப்பட்டுள்ளது. நெருக்கடியினை மேலும் தீவிரப்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமித்தமைக்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரச தலைவரிடம் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டால் தனது பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

டீல் அரசியலினால் தற்போதைய நெருக்கடிகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்பட வேண்டும்.

ஆகவே சகல அரசியல் கட்சிகளும் இணைந்து  சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.