சமுத்திரகனி நடிக்கும் 'ராமம் ராகவம்' படத்தின் டீசர் வெளியீடு
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகராக உயர்ந்து, கதையின் நாயகனாகவும் நடித்து வரும் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் 'ராமம் ராகவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக நடைபெற்ற பிரத்யேக விழாவில் தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த படைப்பாளியான இயக்குநர் பாலா சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராமம் ராகவம்' எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன், சத்யா, மோக்ஷா சென் குப்தா, பிரமோதினி, சீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். துர்க்கா பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் சிலுவேரு இசையமைத்திருக்கிறார். அப்பா- மகன் உறவை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தை சிலேட் பென்சில் ஸ்டோரீஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிருத்வி பொலவரபு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரபாகர் ஆரிபாகா வழங்குகிறார்.
இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இதன் போது தேசிய விருது பெற்ற இயக்குநரான பாலா, இயக்குநர் பாண்டிராஜ், நடிகர்கள் சூரி, பொபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.
இப்படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் வசனங்கள் அப்பா- மகன் இடையேயான உறவையும், மகனின் வளர்ச்சிக்காக தந்தை எடுக்கும் முயற்சியையும்.. உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.