முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை!

04.12.2025 09:22:11

புயல் மற்றும் வெள்ளம் தொடர்பில் காலநிலை ஆராய்ச்சி மையம் அரசாங்கத்துக்கு முன்கூட்டியதாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. இது கவலைக்குரியது. என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புக்களையிட்டு பெரும் வேதடையடைந்துள்ளோம். நாட்டின் சகல பிரதேச செயலக பிரிவுகளும் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்ட ஒரு அனர்த்தமாகவே இது காணப்படுகிறது.

அரசாங்க் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. சர்வதேச மட்டத்தில் தேர்ச்சிப் பெற்ற அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள்.அரசாங்கம் தனக்கு தேவையானவர்களை நியமித்தது.

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை ஊடாக சகல பிரதேச செயலகங்களுக்கும் படகு மற்றும் உயிர்காக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.இந்த அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்துக்காக எவ்வித முன்கூட்டிய நடவடிக்கைகளையும் கடந்த ஒருவருடகாலமாக மேற்கொள்ளவில்லை.

குளியாப்பிட்டி பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது பிரதேச செயலக பிரிவில் இருந்து படகுகள் இயங்கவில்லை.மீனவர்களின் படகுகளை பெற்றுக்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டோம். புயல் மற்றும் வெள்ளம் தொடர்பில் காலநிலை ஆராய்ச்சி மையம் அரசாங்கத்துக்கு முன்கூட்டியதாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.இது கவலைக்குரியது.

வெள்ளம் பெருக்கெடுத்ததன் பின்னரே மிகவும் தாமதமான நிலையில் பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன.இதனால் தான் பெருமளவிலான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின.இந்த நெருக்கடியான நிலையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கவில்லை. முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் விரைவாக நிவாரணமளிக்க வேண்டும். பெரும்பாலானவர்களின் தொழிற்றுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இவர்களின் வங்கிக் கடன் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி கடன் செலுத்தலுக்கு நிவாரண காலம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.