மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024:

18.03.2024 07:00:00

பெங்களூரிலும் பின்னர் டெல்ஹியிலும் நடைபெற்றுவந்து இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் ரி20 கிரிக்கெட் அத்தியாயத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் சம்பியனானது.

 

நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸை நீக்கல் போட்டியில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், ஞாயிற்றுக்கிழமை (17) இரவு மின்னொளியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டு சம்பியனானது.

 

சொஃபி மொலினொக்ஸ்,  ஸ்ரீயன்கா பட்டில்,  ஆஷா சோபான ஆகியோரின் மிகத் துல்லியமான பந்துவீச்சுக்கள், முன்வரிசை வீராங்கனைகளின் சாதுரியமான துடுப்பாட்டங்கள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை புதிய சம்பியனாக உயர்த்தின.

 

16 இண்டியன் பிறீமியர் லீக் (ஆடவர்) அத்தியாயங்களிலும் 3 விமென்ஸ் ரி20 செலஞ் அத்தியாயங்களிலும்  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் சாதிக்க முடியாததை இரண்டாவது மகளிர் பிறீமியர் லீக் அத்தியாயத்தில் சம்பியனானதன் மூலம்  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்   மகளிர் அணி சாதித்துள்ளது.

எனினும் அந்த வெற்றி இலகுவாக அமையவில்லை. கடைசி ஓவரிலேயே றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வெற்றி கிடைத்தது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 114 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 19.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனாவும் சொஃபி டிவைனும் 49 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் சொஃபி டிவைன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 82 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்ம்ரித்தி மந்தனா 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும், எலிஸ் பெரி, ரிச்சா கோஷ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து 3 பந்துகள் மீதமிருக்க தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

எலிஸ் பெரி 35 ஓட்டங்களுடனும் ரிச்சா கோஷ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி மெக் லெனிங் (23), ஷஃபாலி வர்மா (44) ஆகிய இருவரும் நிதானமும் அதிரடியும் கலந்து துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அடுத்த 68 பந்துகளில் 59 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களும் சரிந்தன.

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரொட்றிக்ஸ், அலிஸ் கெப்சி ஆகிய அதிரடிக்கு பெயர்பெற்ற மூவரும் சொஃபி மொலினொக்ஸின் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தது டெல்ஹி கெப்பிட்டல்ஸின் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.

மத்திய வரிசையில் ராதா யாதவ் (12), அருந்ததி ரெட்டி (10) ஆகிய இருவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

மொலினொக்ஸைப் போன்று ஸ்ரீயன்கா பட்டிலும் அடுத்தடுத்து விக்கெட்களை சரித்தார்.

ஸ்ரீயன்கா பட்டில் 3.3 ஓவர்களில் 12 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களையும் சொஃபி மொலினொக்ஸ் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆஷா சோபனா 3 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சம்பியனான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் இந்திய நாணயப்படி 6 கோடி ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு 3 கோடி ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.