காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் குறித்து மன்னாரில் கவலைகள் ; கரிசனைகள்
மன்னாரில் அதானிகுழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து கரிசனைகள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள இந்து நாளிதழ் இது பறவைகளிற்காக மரணபொறி என்ற கருத்து நிலவுவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது
இந்து நாளிதழ் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்தியாவின் அதானி கிறீன்ஸ் நிறுவனத்தினால் இலங்கையின் வடபகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது.
கரையோர பகுதிகளிலும் வாழ்வாதாரத்திற்கும் இந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சூழலியாளர்களும் உள்ளுர்மக்களும் கரிசனையும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் வடபகுதியில் காற்றுவளம் அதிகமாக உள்ள இரண்டு பகுதிகளில் 42 மில்லியன் டொலரில் இரண்டு காற்றாலை மின்உற்பத்தி திட்டததை முன்னெடுப்பதற்கு கடந்த வருடம் இலங்கையின் முதலீட்டு சபை அனுமதி வழங்கியிருந்தது.
இந்த இரு திட்டங்கள் மூலம் மன்னாரில் 250வோட் மின்சாரத்தையும் பூநகரியில் 34 மெகாவோட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும்.இலங்கையின் மின்சாரதுறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது எக்ஸ் தளத்தில் மார்ச் 4ம் திதி இதனை தெரிவித்திருந்தார்.
இன்னமும் இறுதிசெய்யப்படாத மின்கொள்வனவு உடன்படிக்கையில் அதானிகிறீன்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சாகர் அதானியுடன் கைச்சாத்திட்ட பின்னர் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இலங்கையின் அதிகரிக்கும் எரிசக்திதேவைகளை எதிர்கொள்வதற்காக 2030ஆண்டிற்குள் இந்த எரிசக்திதேவையின் 70 வீதத்தினை மீள்புதுப்பிக்கத்த சக்திவளங்கள் மூலம் பெறுவதற்காக இலங்கை அரசாங்கம் இந்த திட்டங்களை முன்னெடுக்கின்றது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு 11.5 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது .
மீள்புதுப்பித்தக்க சக்திவளங்கள் என்ற விடயத்தில் இலங்கையுடன் நெருங்கிய ஒத்துழைப்பை பேணுவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.
மீயள்புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் தொடர்பான இருநாடுகளிற்கும் இடையிலான செயற்குழுவின் முதலாவது கூட்டம் மார்ச் மாதம் 11ம் திகதி இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்திவளங்களை உருவாக்குவதற்காக இந்தியா 11 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
2023 டிசம்பரில் இலங்கை அவுஸ்திரேலியாவை சேர்ந்த யுனைட்டட் சோலர் குழுமம் கிளிநொச்சியில் 700 மெகாவோட் சூரியசக்தி மின்திட்டத்தில் முதலீடு செய்தது.
இதேவேளை அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினால் பிரதேசத்தின் பல்லுயுர் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கரையோர சூழலுடன் பின்னிப்பிணைந்துள்ள அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியாளர்களும் பொதுமக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்த பொருளாதார மீட்சி திட்டங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்குகிழக்கில் பெருமளவு குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
பறவைகள் குறித்த ஆய்வாளர்கள் மற்றும் வல்லுனர்களின் தகவலின் படி மன்னார் மத்திய ஆசியாவின் பறவைகள் பறக்கும் பாதையின் ஒரு முக்கிய பகுதியாகும்.
உலகின் உள்ள பல நீர்பறவை இனங்களின் முக்கியமான இடம்பெயர் பாதையாக இது காணப்படுகின்றது.
ஒவ்வொரு மாரிகாலத்திலும் ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் அந்த பகுதியின் ஈரநிலங்களை நோக்கி வருகின்றன.இந்த பறவைகளை காண்பதற்காக பெருமளவு பறவை ஆர்வலர்களும் சூழல் ஆர்வலர்களும் அப்பகுதிக்கு செல்வது வழமை.
இந்த காற்றாலை மின் திட்டம் பறவைகளிற்கு ஒரு மரணப்பொறி என கவலை வெளியிட்டார் கொழும்பு பல்கலைகழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானபிரிவைசேர்ந்த பேராசிரியர் சம்பத் செனிவிரட்ண.
உத்தேச காற்றாலை மின் திட்டம் மன்னாரின் மத்திய பகுதியில் உள்ள மிகச்சிறந்த வனப்பகுதியில் அமையவுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த பகுதி இலங்கையை நெருங்கும் பறவைகள் தங்கிச்செல்வதற்கு மிகவும் முக்கியமான பகுதி அந்த பறவைகள் இங்கு தங்கி தங்களை மீண்டும் பறத்தலிற்காக மீள தயார்படுத்துவது வழமை என அவர் எழுதியுள்ளார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 50 டேர்பைன்களை கொண்ட காற்றாலை விசையாழிகள் நிறுவப்படவுள்ளன என தெரிவித்த மன்னாரை சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் மேரிநாதன் எடிசன் இதற்காக பெருமளவு வனவளம் அழிக்கப்படலாம் என தெரிவித்தார்.
அவர்கள் மறுசீரமைப்பு மற்றும் காடுகளை வளர்ப்பது பற்றி எவ்வளவு பேசினாலும் முன்னர் காணப்பட்ட நிலைமையை மீள ஏற்படு;த்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அவரை போன்ற ஆர்வலர்கள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்களுக்கான இலங்கையின் முயற்சிகளை பாராட்டும் அதேவேளை அதன் காரணமாக கிடைக்கும் நன்மைகளை விட சூழல் பாதிப்புகளால் ஏற்படக்கூடிய தீமைகள் அதிகமாக காணப்படலாம் என தெரிவித்தனர்.