1991 ஆம் ஆண்டு தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது
சர்வதேச அளவில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
53 வயதுடைய குறித்த சந்தேக நபர் 1991 ஆம் ஆண்டு ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவராவார்.
இந்நிலையில், ஜேர்மனியில் கைதான சந்தேக நபர் 19 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க 23 ஆம் திகதி ருமேனியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ருமேனியா பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் சந்தேக நபர் தனது வீட்டில் வெளிநாட்டு பிரஜை ஒருவரை கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட நபரை ஒரு கம்பளத்தில் போர்த்தி அயலூரான க்ராங்காசிக்கு கொண்டு சென்று மோரி ஏரியில் வீசியுள்ளார்.
இந்த கொலை குற்றத்திற்காக சந்தேக நபருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் ஜேர்மனியில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து ருமேனியா பொலிஸ் ஜேர்மனியின் மோயர்ஸ் நகரில் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி சந்தேக நபரை கைது செய்துள்ளது.
சந்தேக நபர் ருமேனியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு தண்டனையை அனுபவிக்க தனி நபர் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.