ஐ.நாவை நம்ப வேண்டாம், அதற்கு தைரியம் இல்லை!
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக ஐக்கிய நாடுகள் சபையை நம்ப வேண்டாம். இலங்கை பிரச்சினையில் செயல்பட ஐ.நாவுக்கு தைரியம் இல்லை என்று ஐ.நாவின் முன்னாள் உதவி பொதுச்செயலாளரும் ஐ.நா நிபுணர் குழுவின் முன்னாள் தலைவருமான சார்லஸ் பெட்ரி தெரிவித்தார்.
சில அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
கொழும்பிலும் பிற இடங்களிலும் சரியானதைச் செய்ய விரும்பும் ஐ.நா. அதிகாரிகள் உள்ளனர். ஆனால் ஐ.நாவுக்கு தைரியம் இல்லை, எனவே இலங்கை பொதுமக்கள் ஐ.நா.வை சார்ந்து இருக்கக்கூடாது. ஒரு வேளை ஐ.நாவினால் நீதி கிடைத்தால் அது எதிர்பாராத வெற்றியாகும் என்று அவர் கூறினார்.
இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குறித்து விரிவான மறுஆய்வு செய்ய அப்போதைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவுக்கு பெட்ரி தலைமை தாங்கினார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று அந்த குழு கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.